வந்தே பாரத் ரயில்களில் 1,11,00,000 பயணிகள் பயணம்... பிரதமர் மோடி பெருமிதம்!

By காமதேனு

11 மாநிலங்களுக்கான 9 வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

வந்தே பாரத் ரயில்

இந்திய ரயில்வே சாா்பில் பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய அதிநவீன வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகம், பீகார், மேற்கு வங்கம், கேரளம், ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் மேலும் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை மேம்படுத்தும் வகையில், திருநெல்வேலி-சென்னை, விஜயவாடா-சென்னை, உதய்பூர்-ஜெய்ப்பூர், ஹைதராபாத்-பெங்களூரு, பாட்னா-ஹவுரா, ராஞ்சி-ஹவுரா காசர்கோடு-திருவனந்தபுரம், ரூர்கேலா-புவனேஸ்வர்-புரி, ஜாம்நகர்-அகமதாபாத் இடையிலான 9 வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடி

இதன் பின் பிரதமர் மோடி பேசுகையில்," வந்தே பாரத் ரயில்களின் புகழ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவற்றில் ஏற்கெனவே 1,11,00,000 பயணிகள் பயணம் செய்துள்ளனர். ஏற்கெனவே 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 9 ரயில்கள் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

வந்தேபாரத் ரயில்கள் புதிய இந்தியாவின் புதிய உணர்வையும், உற்சாகத்தையும் வெளிப்படுத்துகின்றன. வேகம், உள்கட்டமைப்பு வளர்ச்சியின் அளவு 140 கோடி இந்தியர்களின் அபிலாஷைகளுடன் பொருந்துகிறது.

ஜி 20 உச்சிமாநாட்டின் வெற்றி, இந்தியாவுக்கு ஜனநாயகம், மக்கள்தொகை, பன்முகத்தன்மை ஆகியவற்றின் சக்தி உள்ளது என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.

அனைத்து இந்தியர்களும் புதிய இந்தியாவின் சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள்; சந்திரயான் 3 வெற்றியால் சாமானியர்களின் எதிர்பார்ப்பு விண்ணை எட்டியுள்ளது. மகளிர் இடஒதுக்கிடு மசோதா ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க உதவுகிறது" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE