புதிய உச்சத்தைத் தொட்டது தங்கத்தின் விலை... ஒரு சவரன் ரூ.53,280!

By காமதேனு

தங்கம் விலை இன்று ஒரே நாளில் 360 ரூபாய் உயர்ந்துள்ளதால் ஒரு சவரன் 53,280 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தங்க நகை

பெண்களுக்குப் பிடித்தமானதில் தங்கம் முதலிடத்தை வகிக்கிறது.தென்னிந்திய அளவில் அதிக தங்கம் வைத்துள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதற்கு காரணம், தங்கநகை மீது பெண்களுக்கு இருக்கும் மோகம் தான். ஒரு காலத்தில் பூக்களோடு பொன்னை ஒப்பிட்டார்கள். ஆனால், இப்போது அப்படியெல்லாம், ஒப்பிட முடியாத அளவிற்கு வரலாறு காணாத விலையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

மார்ச் மாதத்தின் இறுதியில் இருந்தே தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. அது ஏப்ரல் மாதம் முதலில் இருந்து உச்சத்தைத் தொட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 5-ம் தேதி நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.52,080க்கு விற்பனையானது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (ஏப்.6) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்தது. கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,615க்கும் , சவரன் ரூ.52,920க்கும் விற்பனையானது. இதனால் தங்கம் விலை ரூ.53 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் சாமானியர்கள் கலக்கம் அடைந்தனர்.

தங்க நகை

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.360 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்க நகை ரூ.53,280-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,660-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நகை விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE