முகக்கவசம் அணியவேண்டும்... அதிகரிக்கும் கொரோனா தொற்றால் சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை!

By காமதேனு

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியும்படி அந்நாட்டு மக்களிடம் சுகாதார அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனால் இரண்டு ஆண்டுகள் உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்பை சந்தித்தன. தற்போது பல நாடுகளில் இயல்புநிலை திரும்பிய நிலையில், சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

முகக்கவசத்துடன் குழந்தைகள்

இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “ டிசம்பர் 3 முதல் 9 வரை கணக்கிடப்பட்ட கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 56,043 ஆகஅதிகரித்துள்ளது, இது முந்தைய வார நோயாளிகள் எண்ணிக்கையுடன் (32,035) ஒப்பிடுகையில் 75 சதவீத உயர்வு ஆகும்.

கரோனா தொற்றுக்காக தினமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை 225-ல் 350 ஆக அதிகரித்துள்ளது. இதில் தினமும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவோரின் சராசரி எண்ணிக்கை 4-ல் இருந்து 9 ஆக உயர்ந்துள்ளது.

நோயாளிகளில் பெரும்பாலானோர் ஜேஎன்.1 வகை வைரஸின் துணைப் பிரிவான பிஏ.2.89 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வகை வைரஸ் அதிகம் பரவக் கூடியவையா அல்லது மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தக் கூடியவையா என்பதற்கான தெளிவான அறிகுறிகள் தற்போது இல்லை.

எனவே கடும் சுவாச நோய்த்தொற்று அறிகுறி இருப்பவர்கள் வீட்டிலேயே இருக்கவும், மற்றவர்களுடன் தொடர்பை தவிர்க்கவும், நோய்த் தொற்று அறிகுறி இல்லாதவர்கள் நெரிசலான இடங்களில் கட்டாயம் முகக் கசவம் அணியவும், விமானப் பயணிகள் முகக்கசவம் அணிவதுடன் பயண காப்பீடு எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தீவிர நோய் பாதிப்பு உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவை நாடலாம். இது, கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான நேரத்தில் சிகிக்சை பெற உதவியாக இருக்கும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE