இதயமும் மனநலமும் - சிறப்பு கைடன்ஸ் @ உலக இதயம் தினம்

By KU BUREAU

உலக இதய தினம் - 2024-ம் ஆண்டுக்கான தீம் `Use Heart for Action' அதாவது உங்கள் இதயத்தை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் அதற்கான நடவடிக்கைகளை அரசு மற்றும் மற்ற அமைப்புகள் செய்யவேண்டும் என்பது தான். ஒரு மனநல மருத்துவராக இந்த தீம்-ஐ நான் வேறு ஒரு கோணத்தில் பார்க்கிறேன். Heart என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் மனதை குறிக்கவும் பிரயோகப்படுத்துவார்கள். அதனால் ‘உங்கள் மனதை கொண்டு உங்கள் இதயத்தை பார்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்' எனும் கோணத்தில் இதை பார்க்கலாம்.

மனதுக்கு நம் உடலில் உள்ள எல்லா பாகங்களுக்கும் சம்பந்தம் உண்டு. இது தான் Mind- Body Connection என்று சொல்லப்படுகிறது. போர்க்காலத்தில், நமது உடலை காப்பாற்றி கொள்ளவும், போரில் வெற்றி கொள்ளவும், நமது உடலில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படும். நமது மூளையையும் உடலையும் இந்த போர்க்களத்தில் உத்வேகமாக செயல்படுத்துவதற்கு நமது கருவிழிகள் விரியும், நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று நாம் தெளிவாக கவனமாக பார்க்க வேண்டும் என்பதற்காக, நமது மூளை எச்சரிக்கையுடன் செயல் படும், நமது இதயம் வேகமாக துடிக்கும், நமது இரத்த அழுத்தம் அதிகமாகும், நமது சுவாசமும் அதிகமாகும்.

வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ் அதிகமாக இருக்கும்போது, நமது உடல் அது போர்க்களத்தில் இருப்பது போன்று நினைத்துக்கொண்டு இந்த மாற்றங்களை எல்லாம் தூண்டிவிடும். எப்பொழுதாவது அப்படி இருந்தால் பரவாயில்லை, எப்போதும் போர்க்களத்தில் இருப்பதுபோல இருந்தால், ரத்த அழுத்தம் அதிகமாகவே இருக்கும், இதயம் வேகமாக துடித்து துடித்து சோர்வடைந்து விடும், மூளைக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுக்கிறேன் என்று உடலில் சர்க்கரை அளவு அதிகமாகி நீரிழிவு நோய் வந்து விடும். இது தான் மனதுக்கும் இதயத்துக்கும் ஆன சம்பந்தம்.

மனநலம் நன்றாக இல்லையென்றால், அது இதயத்தின் செயல்களை பாதிக்கும். இதய நோய் வருவதற்கான அனைத்து ஆபத்து காரணிகளையும் உடலில் உருவாக்கும். இதய நலனை காக்க மனநலத்தை காப்பது மிக முக்கியம் ஆகிறது.

மனநலத்தை காப்பது என்றால் என்ன, போர்க்களத்தில் உள்ளது போலவே நமது உடலை போட்டு வாட்டி எடுக்குது ஸ்ட்ரெஸ், அதை சரியாக கையாள்வது தான் மனநலத்தை காப்பது, அது தான் நம் இதய நலத்தையும் காக்கும். இந்த போர்க்களத்தின் மாற்றங்களையெல்லாம் சிம்பதெடிக் (Sympathetic )நெர்வோஸ் சிஸ்டம் எனப்படும் நரம்பு மண்டலம் செய்கிறது. இதில் இருந்து நம்மை காக்க பராசிம்பதெடிக் (Parasympathetic) நெர்வோஸ் சிஸ்டம் எனப்படும் நரம்பு மண்டலத்தை நாம் தூண்டி விட வேண்டும். இந்த நரம்பு மண்டலம் அமைதியான காலங்களில் நம் உடலை பாதுகாக்க பிரயோகப்படும்.\

எம்.உஷா நந்தினி எம்.டி., டி.என்.பி., மனநல மருத்துவர், கிரிஷ் மருத்துவமனை, தஞ்சாவூர்.

இதை தூண்ட இவற்றை செய்யலாம்:

l நன்றாக தூங்கி எழுவது. நிம்மதியான உறக்கம் மிக முக்கியம்.

l வேலையின் பளுவை வாழ்க்கைக்குள் நுழைய விடாமல் நிர்வகிப்பது. மனம் விட்டு பேசுவது. பேச முடியாத விஷயங்களை எழுதுவது (டைரி எழுதுவது).

l பிடித்த விஷயங்களில் நேரம் செலவழிப்பது.

l மதுப்பழக்கம் , புகைபிடித்தல் போன்ற பழக்கங்களை தவிர்ப்பது.

l உடற்பயிற்சியை இயன்ற அளவுக்கு செய்வது. மூச்சுப் பயிற்சி செய்வது.

l உடலுக்கு தேவையில்லாத உணவை (junk food) தவிர்ப்பது.

l டிவி, இன்டர்நெட், செல்போன் ஆகியவற்றில் தேவையில்லாமல் நேரம் செலவழிப்பதை தவிர்ப்பது.

l ஏற்கெனவே உடலிலோ மனதிலோ ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதற்கான சிகிச்சையை சரியாக எடுப்பது.

இவையெல்லாம் நமது மனநலனையும், உடல்நலனையும் அதோடு இதயநலனையும் காக்க உதவும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE