விருதுநகர் மெகா விருந்து: 100+ வகை சிறுதானிய உணவு தயாரிப்பில் அசத்தும் மகளிர் குழுவினர்!

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகரில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழாவில் சிறுதானியங்களில் 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை செய்து காட்டி மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆச்சரியப்படுத்தினர்.

கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர் போதிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர். 2024-25-ம் நிதி ஆண்டுக்கு “ரத்த சோகை இல்லாத கிராமம்” குறித்த சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழாவாக நடத்தப்பட்டது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் “ரத்த சோகை இல்லாத கிராமம்” குறித்த சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா என்ற தலைப்பில் விருதுநகர் மாவட் டத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு, கடந்த 17-ம் தேதி வரை ஊராட்சி அளவில் நடத்தப்பட்டது.

விருதுநகரில் நடைபெற்ற உணவு திருவிழாவில் பங்கேற்றோர்.

அதைத்தொடர்ந்து, கடந்த 18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை ஒன்றிய அளவிலும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தப்பட்டது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒன்றிய அளவிலான போட்டியில் முதல் 3 பரிசுகளைப் பெற்ற சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான மாவட்ட அளவிலான உணவுத் திருவிழா போட்டி விருதுநகரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், 11 ஒன்றியங்களிலிருந்தும் தலா 3 குழுக்கள் வீதம் 33 குழுக்கள் பங் கேற்றன. அதோடு, சிறுதானியத்தில் 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை செய்து காட்டி ஆச்சரியப்படுத்தினர்.

குறிப்பாக, சம்பா அவல் புட்டு, அவல் லட்டு, கோதுமை இனிப்பு புட்டு, கேழ்வரகு லட்டு, கேழ்வரகு இனிப்பு சேமியா, கோதுமை அடை, கம்பு உருண்டை, சம்பா அரிசி புட்டு, கேழ்வரகு இட்லி, சோள இட்லி, குதிரைவாலி இட்லி, சோள தோசை, சாமை அரிசி சாதம், மட்டை அரிசி சாதம், வரகரிசி பொங்கல், சிவப்பு அவல் பாயாசம், தினை அரிசி தக்காளி சாதம், நவதானிய பனியாரம், பனம்பழம் பனியாரம், முளைகட்டிய பயறு சாலட் உட்பட 100-க்கும் மேற்பட்ட சிறுதானிய உணவு வகைகளை செய்து காட்சிப்படுத்தினர்.

இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஷீலாசுந்தரி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பார்வையிட்டு உணவு வகைகளை ருசி பார்த்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE