ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படுமா?

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சிக்காக பல்வேறு அரசு துறைகள் சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று உலக சுற்றுலா தினத்தையொட்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகில் சுற்றுலா மூலம் மனித குலத்தை மேம்படுத்தும் வகையில், செப்டம்பர் 27-ம் தேதியை உலக சுற்றுலா தினமாக ஐக்கிய நாடுகள் சபை 1970-ம் ஆண்டு அறிவித்தது. அதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் இந்நாளில் சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் ஆன்மிக மற்றும் சுற்றுலா தலங்கள் அதிகமுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். கடற்கரை சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா என பல்வேறு வகைகளில் ராமநாதபுரம் மாவட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டிலேயே மிக நீண்ட கடற்பரப்பைக் கொண்டது ராமநாதபுரம் மாவட்டம். தமிழ்நாட்டின் 1,076 கி.மீ. நீளமுள்ள கடற்கரையில் சுமார் 250 கி.மீ. நீளம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 15 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இதில் சித்திரங்குடி, காஞ்சிரங்குளம், மேலச்செல்வனூர் கீழச்செல்வ னூர், சக்கரக்கோட்டை, தேற்றங்கால் ஆகிய 5 பறவைகள் சரணாலயங்கள் ராமநாத புரம் மாவட்டத்தில் உள்ளன. இதில் அதிகளவு வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருகின்றன.

இந்தியாவின் முதல் கடல்வாழ் உயிர்கோள காப்பமான மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகமும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந் துள்ளது. ராமேசுவரம் ஆன்மிக தலமாக மட்டுமின்றி சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. தனுஷ்கோடி, அரிச்சல்முனை, ராமேசுவரம், பாம்பன், அரியமான், குருசடை தீவு, காரங்காடு உள்ளிட்ட கடற்கரை பகுதியை காண ஆண்டுதோறும் 4 கோடி சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

குருசடை தீவு

ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பெரிய அளவில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் மேற் கொள்ளப்படவி்ல்லை. அமாவாசை தினங்களில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க வரும் அக்னி தீர்த்தக் கடற்கரை குப்பை நிரம்பியும், கழிவுநீர் கலந்தும் அசுத்தமாக உள்ளது. இதை சரி செய்வதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை.

ராமேசுவரத்தில் உள்ள ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலங்களை மக்கள் பார்வையிட வசதியாக சுற்றுலா பேருந்து சேவையை ரூ.80 கட்டணத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கடந்த மார்ச் 6-ம் தேதி தொடங்கி வைத்தார். ஆனால், பேருந்து சேவையால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தனியார் வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், அடுத்த நாளே சுற்றுல பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் வனத்துறை சார்பாக ராமநாதபுரம் சூழல் சுற்றுலா ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கப்பட்டது. இதில் பவளப்பாறை பாதுகாப்பு, படகு சவாரி, பறவைகள் கண்காணிப்பு மையம், ஆமைகள் குறித்த விழிப்புணர்வு மையம், கடற்பகுதி கழிமுகப் பகுதி மேம்படுத்தப்படும் என தெரி விக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை.

ஹெலிகாப்டர் சேவை திட்டம்: கடந்த ஆண்டு தமிழக பட்ஜெட்டில் ராமேசுவரத்துக்கு ஹெலிகாப்டர் சேவை திட்டத்தை அரசு அறிவித்தது. இதுவரை இதற்காக ராமேசுவரம் - தனுஷ்கோடி நெடுஞ்சாலையில் ஹெலிபேட் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.

ஆனால், அதைத் தொடர்ந்து எந்த பணியும் நடைபெறவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை உடனடியாக செயல்படுத்தவும், புதிய திட்டங்களை கொண்டு வரவும் அரசும், மாவட்ட நிர்வாகமும் முயற்சிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE