உஷார்... இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனைக்குப் போங்க... டெங்கு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

By காமதேனு

தமிழகத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மற்ற காய்ச்சல்களுடன் ஒப்பிடும் போது டெங்கு மிகவும் மோசமான உயிர்கொல்லி என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

இரவு நேரத்தைக் காட்டிலும் பகல் நேரத்தில் கடிக்கக்கூடிய ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் மூலமாக டெங்கு காய்ச்சல் பரவுகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான நபர்களுக்கு ஆரம்பத்தில் எந்த ஒரு அறிகுறிகளும் தெரிவதில்லை.

எனினும், டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகளை பற்றி தெரிந்து வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில், இது வெறும் காய்ச்சலாக மட்டுமல்லாமல், இது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே பிரச்சினையாகி விடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

காய்ச்சல்

தொடர்ச்சியான காய்ச்சல், டெங்கு இருப்பதற்கான ஒரு அறிகுறி ஆகும். காய்ச்சலோடு சேர்த்து தோலில் சிராய்ப்புகள், சிறுநீர் மற்றும் மலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவையும் இதன் அறிகுறிகள். இது ஏழு நாள் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. டெங்கு பாதித்தால் அதிக காய்ச்சல், மோசமான தலைவலி, சோர்வு மற்றும் தசை மற்றும் மூட்டுகளில் வலி போன்ற அறிகுறிகளும் தென்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கண்களின் பின்புறத்தில் வலி, குமட்டல், வாந்தி மற்றும் ஈறுகள் அல்லது மூக்கில் ரத்தக் கசிவு போன்றவை டெங்கு காய்ச்சலுக்கான பிற அறிகுறிகள். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாடுவது அவசியம். பொதுவாக இந்த அறிகுறிகள் இரவு நேரத்தில் மோசமாகலாம் என்பதால் பகல் நேரத்தில் இதற்கான தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்வது முக்கியமாக கருதப்படுகிறது.

பொதுவாக டெங்கு காய்ச்சலின் போது பிளேட்லெட் செல்களின் எண்ணிக்கை வெகு விரைவாக குறையக்கூடும். இது டெங்கு காய்ச்சலின் மிகவும் தீவிரமான ஒரு நிலையாகக் கருதப்படுகிறது. இது த்ரோம்போசைட்டோபினியா (Thrombocytopenia) என்று அழைக்கப்படுகிறது. கூடுதலாக டெங்கு காய்ச்சல் இருக்கும் போது குடலின் சுவர்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, மலத்தோடு ரத்தம் வெளியேறுகிறது.

டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை அதற்கென்று தனியாக சிகிச்சை முறைகள் இல்லை எனக் கூறும் மருத்துவர்கள் மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டுமென எச்சரிக்கின்றனர்.

அதேசமயம், பாதுகாப்பான சூழலை நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென கூறும் மருத்துவர்கள், சத்தான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகளவில் பச்சை நிற காய்கறிகள், நீர் சத்து நிறைந்த காய்கறிகளை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE