காவிரி விவகாரம்! மத்திய ஜல்சக்தி அமைச்சரை சந்தித்தார் கர்நாடக துணை முதல்வர்!

By காமதேனு

தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார், ஜெய்ப்பூரில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று சந்தித்து பேசினார்.

காவிரி நதி நீரை பங்கீட்டு கொள்வதில் கர்நாடகா- தமிழ்நாடு இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. நடப்பு ஆண்டில் கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு திறக்க வேண்டிய நீரை திறக்கவில்லை. இதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீது விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்தது. இந்த நிலையில் காவிரி நதி நீர் விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக கர்நாடக அனைத்துக்கட்சி அவசர கூட்டம் நேற்று சித்தராமையா தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சி பிரதிநிதிகளும் தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க கூடாது என வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. நீர் திறந்துவிட வேண்டும். அதன்படி தமிழகத்திற்கு இதுவரை 99 டி.எம்.சி. நீர் திறந்து விட்டிருக்க வேண்டும். எனினும், நடப்பு ஆண்டு மழை பற்றாக்குறையால் அணைகள் நிரம்பவில்லை.

கர்நாடகா அனைத்துக் கட்சி கூட்டம்

இதனால், தமிழகத்திற்கு இதுவரை 37 டி.எம்.சி. நீர் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிற்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்கு 103 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது. தற்போது அணைகளில் வெறும் 53 டி.எம்.சி. நீர் மட்டுமே உள்ளது. எனவே, எங்களிடமே போதிய அளவு நீர் இல்லை. கர்நாடகத்தில் உள்ள நிலவரத்தை எடுத்துக் கூறியும் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக விவசாயிகளின் நலனை புறக்கணித்து விட்டு தண்ணீர் திறக்க வேண்டும் என யாரும் கூறவில்லை. காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரி ஒரு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கக்கூடாது என்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. ஆனால் காவிரி நீர் திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை" என்றார்.

இந்த நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று சந்தித்து பேசினார். ஜெய்பூரில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக சித்தராமையா அளித்த கடிதத்தை மத்திய அமைச்சர் ஷெகாவத்திடம் டி.கே.சிவக்குமார் அளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE