ஆவின் நெய், வெண்ணெய் விலை உயர்வு; இன்று முதல் அமலுக்கு வந்தது!

By காமதேனு

ஆவின் நெய் ஒரு கிலோ 70 ரூபாய் அதிகரித்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நெய் மட்டுமல்லாது ஆவின் வெண்ணெயும் விலை உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

ஆவின்

தமிழக அரசின் ஆவின் நிர்வாகம் நாளொன்றுக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது. ஆவின் பாலகங்களில் இனிப்புகள், பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆவின் நெய், வெண்ணெய்க்கு மக்களிடையே வரவேற்பு அதிகம் உண்டு. தனியார் நெய், வெண்ணெயை விட சுவை கூடுதலாகவும் விலை குறைவாக இருப்பதே இதற்குக் காரணம்.

இந்நிலையில் ஆவின் பொருட்களின் விலையை ஆவின் நிர்வாகம் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. ஆவின் நெய் மற்றும் வெண்ணெயின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 15 மில்லி லிட்டர் ஆவின் நெய்யின் விலை 14 ரூபாயிலிருந்து 15 ரூபாயாகவும் , 100 மில்லி லிட்டர் நெய்யின் விலை 70 ரூபாயிலிருந்து 80 ரூபாயாகவும், 100 மில்லி லிட்டர் நெய் பாட்டிலின் விலை 75 ரூபாயிலிருந்து 85 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

200 மில்லி லிட்டர் நெய் பாட்டில் 145 ரூபாயிலிருந்து 160 ரூபாயாகவும் 500 மில்லி லிட்டர் நெய் பாட்டில் 315 ரூபாயிலிருந்து 365 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு லிட்டர் நெய்யின் விலை 630 ரூபாயிலிருந்து 700 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் ஆவின் வெண்ணெய் விலையும் 100 கிராம் 55 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும், 500 கிராம் 260 ரூபாயிலிருந்து 275 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து பண்டிகை நாட்கள் வரவுள்ள நிலையில் ஆவினின் இந்த நடவடிக்கை சாமானிய மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE