நவராத்திரி ஸ்பெஷல்: புதிய வரவாக கண்கவர் கொலு பொம்மைகள்!

By இ.மணிகண்டன்

விருதுநகர்: நவராத்திரி விழாவையொட்டி விருதுநகரில் கண்கவர் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த ஆண்டு புதிய வரவாக ஏராளமான செட் பொம்மைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் பொது மக்கள் அவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளை கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரியில், குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாட்டின் முக்கிய அங்கமாக இடம்பெறுகிறது. அதில், மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. 9 படிகள் அமைப்பது மரபு. ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகள் வைக்கப் படுவது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, முதலாவது படியில் ஓரறிவு உயிரினங்களான மரம், செடி, கொடி, மர பொம்மைகளும், 2-வது படியில் ஈரறிவு உயிரினங்களான நத்தை, சங்கு, ஆமை பொம்மைகளும், 3-து படியில் மூன்றறிவு உயிரினங் களான எறும்பு, கரையான் பொம்மைகளும், 4-வது படியில் நான்கறிவு உயிரினங்களான நண்டு, வண்டு, பறவை பொம்மைகளும், 5-வது படியில் ஐந்தறிவு உயிரினங்களான ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம் மைகளும் வைக்கப்படும்.

தொடர்ந்து, 6-வது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகளும், 7-வது படியில் மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள் பொம்மைகளும், 8-வது படியில் தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள் பொம்மைகளும், 9-வது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுள் உள்ளிட்ட சிலைகளும் வைக்கப்படும். இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும்போது கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம் செழித்தோங்கும் என்பதும் ஐதீகம்.

இச்சிறப்பு மிக்க நவராத்திரி விழா அக்டோபர் 3-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, விருதுநகரில் காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்படைந்து ள்ளது.

இங்கு கல்யாண செட், கார்த்திகை பெண்கள் செட், வசுதேவர் செட், மாயாபஜார் செட், விவசாயம், திருவிளை யாடல், பாஞ்சாலி சுயம்வரம், சீதை பொன் மான், அஷ்டலட்சுமி, தசாவதாரம், பெருமாள் ஜோடி, சீதா கல்யாணம், ராமர் பட்டாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு செட் பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் சங்கீத மும்மூர்த்திகள், விநாயகர் விருந்து, மாயாபஜார், சஞ்சீவி மலை, ராவணன் தர்பார், வராகி அம்மன், பெருமாள் கருட சேவை, வாசுதேவர், கோவர்த்தன கிரி மலை, ராமர் வனவாசம், கிருஷ்ணர் வெண்ணெய் கடைதல், பெருமாள் விஸ்வரூப தரிசனம், ராமர் பாலம், குபேரன் செட், மும்மூர்த்திகள், பரதநாட்டியம், காளிங்க நடனம், சிறுவாச்சூர் காளி, வசிஸ்தர் நந்தினி பசு, அஷ்ட பைரவர் செட், நவக்கிரகம் செட், சப்த மாதா செட் மற்றும் புது வரவாக சோட்டா பீம் செட், டோரிமான் கார்ட்டூன், கார்த்திகை பெண்கள் செட், மஞ்சள் நீராட்டு செட், பொட்டு அம்மன் உட்பட ஏராளமான கொலு பொம்மை செட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பொம்மைகள் மதுரை மாவட்டம் விளாச்சேரி, தஞ்சை மற்றும் மயிலாடுதுறையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை கொலு பொம்மைகள் விற்பனை செய்யப் படுகின்றன. 10 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்வதாகவும் விருதுநகர் காதி கிராப்ட் விற்பனை நிலைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE