விளைச்சல் அதிகம்; விலை குறைவு! தக்காளிகளை சாலையில் கொட்டிச்செல்லும் விவசாயிகள்!

By காமதேனு

தமிழ்நாடு முழுவதும் தக்காளியின் உற்பத்தி வெகுவாக அதிகரித்துள்ளதால் சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 வரையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பயிர் கூலி, பறிக்கும் ஆட்களுக்கு கூலி கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தக்காளி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் முழுவதும் தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.150 முதல் ரூ.200 வரை என திடீரென உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகினர். இதையடுத்து மத்திய மாநில அரசுகள் தக்காளியை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் ரேஷன் கடைகள் மூலம் கிலோவுக்கு ரூ.60 வரை விற்பனை செய்தனர். இதனிடையே தக்காளியின் விலை உச்சம் தொட்டதால் ஏராளமான விவசாயிகள் தக்காளி பயிர்களை அதிக அளவில் பயிர் செய்ய துவங்கினர். இதனிடையே வடமாநிலங்களில் இருந்து தக்காளியின் வரத்து அதிகரித்ததாலும், உள்ளூரிலும் தக்காளியின் உற்பத்தி அதிகரித்ததாலும் தக்காளியின் விலை சரசரவென குறைந்து கிலோவிற்கு 50-க்கும் கீழ் குறைந்தது.

இதனிடையே கடந்த சில நாட்களாக அதிக வரத்து காரணமாக தக்காளியின் விலை கடுமையாக சரிந்து தற்போது சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பயிரிட்ட தக்காளியை அறுவடை செய்யவும் அதனை அங்காடிகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யவும் ஆகும் செலவினங்கள் கூட தக்காளி விற்பனையின் மூலம் கிடைப்பதில்லை என கூறும் விவசாயிகள், செடியில் இருந்து பறிக்கிற கூலியைக் கொடுக்கும் அளவுக்கு கூட விலைப் போகாததால் பல இடங்களில் தக்காளிகளை ஆடு, மாடுகளுக்கு கொட்டுகின்றனர். இதனால் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

கோவை தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், சூலூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் தக்காளி பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளது. இது ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.

இதனிடைய தக்காளியின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால், சிலர் அறுவடை செய்த தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் அதனை சாலையில் வீசி செல்லும் அவலமும் நிலவி வருகிறது. கடந்த மாதம் வரை சிவப்பு தங்கம் என்று வர்ணிக்கப்பட்டு வந்த தக்காளியின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இது போன்ற தருணங்களில் மாற்றுப் பயிர்களை விவசாயிகள் அதிக அளவில் பயிரிட வேண்டும் எனவும் மிகக் கடுமையாக விலை உயரும் போது அதிக அளவில் குறிப்பிட்ட பயிர்களை மட்டும் பயிரிடுவதை தவிர்க்கவும் வேளாண் அதிகாரிகள் உரிய கண்காணிப்பினை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாய சங்கங்களின் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE