ரயில் பயணி தவறவிட்ட 7 பவுன் நகை; மீட்டுக் கொடுத்த ரயில்வே பாதுகாப்பு போலீஸார்!

By காமதேனு

திருநெல்வேலி - செங்கோட்டை ரயிலில் பயணித்த பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.3 லட்சம் மதிப்புடைய 7 பவுன் தங்க நகையினை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

பயணி தவறவிட்ட நகையினை மீட்டு ஒப்படைத்த ஆர்.பி.எப் போலீஸார்.

நெல்லையில் இருந்து செங்கோடை செல்லும் ரயிலில் பயணித்த பூரணி என்பவர் தனது பேக்கினை ரயிலில் தவறவிட்டுள்ளார். அந்த பேக்கில் சுமார் ரூ.3லட்சம் மதிப்புடைய 56 கிராம் எடை கொண்ட இரண்டு தங்க நெக்லஸ், 10 ஆயிரம் மதிப்புடைய புது பட்டுப்புடவை மற்றும் பழைய துணிகள் இருந்துள்ளது.

இது குறித்து இன்று காலை கீழப்புலியூர் ரயில்நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அங்கு பணியில் இருந்த பெண் காவலர் பொற்செல்வி இது குறித்து செங்கோட்டை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்த அந்த ரயிலினை சோதனை செய்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார், அந்த ரயில் பெட்டியில் இருந்த பேக்கினை கண்டடெடுத்தனர். அந்த பேக்கினை சோதனை செய்த போது பெண் பயணி கொடுத்த தகவல்கள் படி தங்க நகை, பட்டுப்புடவை ஆகியன இருந்துள்ளது.

இதனை தொடர்ந்து நகையினை தவறவிட்ட பூரணியை செங்கோட்டை ரயில்வே பாதுகாப்பு படை நிலையத்திற்கு வரவழைத்த போலீஸார், அங்கு மீட்கப்பட்ட அவரது நகை மற்றும் பட்டு சேலையினை வழங்கினர். ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரின் துரித நடவடிக்கையினால் ரயில் பயணியின் நகை மீட்கப்பட்ட செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE