10 ஆண்டுகளாக யானைகள் கூட்டம் முகாம்: கிருஷ்ணகிரியில் 20 கிராமங்களில் வேளாண் பணிகள் பாதிப்பு

By KU BUREAU

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே கடந்த 10 ஆண்டுகளாக முகாமிட்டுள்ள மக்னா உள்ளிட்ட 5 யானைகளால் 20 கிராமங்களில் வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு இடம்பெயரச் செய்ய வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆண்டுதோறும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா தேசிய பூங்கா மற்றும் காவிரி உயிரின சரணாலயம் பகுதியிலிருந்து யானைகள் வலசை வருவது வழக்கம்.

மக்னா உட்பட 5 யானைகள்: இவ்வாறு வரும் யானைகள் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து இப்பகுதியில் சில மாதங்கள் சுற்றித் திரிந்து மீண்டும் கர்நாடக மாநில வனப்பகுதிக்குச் செல்லும்.

இந்நிலையில், தேன்கனிக்கோட்டை அருகே யானைகள் வலசை பாதை உள்ள மரக்கட்டா வனப்பகுதியில் வலசை வந்த மக்னா (மரபணு குறைபாட்டால் தந்தம் வளராத தன்மையுடன் பிறக்கும் ஆண் யானை) உள்ளிட்ட 5 யானைகள் கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் முகாமிட்டு, சுற்றித்திரிவதோடு, வனத்தையொட்டியுள்ள பகுதியில் உள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இதனால், வேளாண் பணி பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

யானைகளிடமிருந்து பயிர்களைக் காக்க சாகுபடிக்கு முன்னர்
விளை நிலத்தில் சூரிய சக்தி மின்வேலி அமைத்துள்ள விவசாயி.

இதுதொடர்பாக மரக்கட்டா கிராம ஊர்த் தலைவர் வெங்கடேஷ் மற்றும் விவசாயிகள் கூறியதாவது: யானை வலசை பாதையான மரக்கட்டா வனப்பகுதியையொட்டி 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் உள்ள பட்டா விளை நிலங்களில் தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் கேழ்வரகு, எள்ளு உள்ளிட்ட மானாவாரிப் பயிர்களைச் சாகுபடி செய்து வருகிறோம். இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுக்கு முன்னர் வலசை வந்த 5 யானைகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளன.

ஆக்ரோஷமாகச் சுற்றும் கிரி: இவை தினசரி மரக்கட்டா, நொகனூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. இக்கூட்டத்தில் உள்ள ஒரு யானை மிகவும் ஆக்ரோஷமாக உள்ளது. இந்த யானைக்கு ஒரு தந்தம் சிறியதாகவும், மற்றொரு தந்தம் நீளமாகவும், அதன் வால் பாதி துண்டாகியுள்ளது. இந்த யானை வயல்களில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் வேலியைச் சேதப்படுத்தி, பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது.

இந்த யானைக்கு வனத்துறையினர் கிரி எனப் பெயர் சூட்டியுள்ளனர். இந்த யானைகளால் இக்கிராமங்களில் வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. யானைகள் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும். மேலும், கிரி யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து வேறு பகுதிக்குக் கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான் 20 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண் பணிகளை நிம்மதியாகத் தொடர முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE