திண்டுக்கல் மாவட்ட கோ ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.1.17 கோடியாக நிர்ணயம்!

By பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கோ ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்காக ரூ.1.17 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா நடைபெற்றது. கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ஆர்.செந்திவேல் முன்னிலை வகித்தார்.

திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி குத்துவிளக்கு ஏற்றி, சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்து பேசுகையில்,"திண்டுக்கல் மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில், 30 சதவீத தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. கொடைக்கானல், பழநி, திண்டுக்கல் ஆகிய மூன்று விற்பனை நிலையங்களில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.84.94 லட்சம் அளவிற்கு நடைபெற்றது. இந்த ஆண்டு தீபாவளி விற்பனை குறியீடாக ரூ.1.17 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கைத்தறி விற்பனை குறியீட்டுத் தொகையை எட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட உதவி செய்ய வேண்டும்" என்று ஆட்சியர் பூங்கொடி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE