2012 பேர் பலி; 2059 பேர் படுகாயம்; கதறும் மொராக்கோ... அள்ள அள்ள பிணக்குவியல்கள்! உலக நாடுகள் உதவிக்கரம்!

By காமதேனு

அன்றைய இரவு அப்படி கடந்து போகும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். சரசரவென கட்டடங்கள் இடிந்து, சீட்டுக்கட்டுகளாய் உதிர்ந்து விழுந்த குவியல்களை அள்ள அள்ள, பிணக்குவியல்களாய் அதிர்ச்சியளிக்கிறது. மொராக்கோவில் நிகழ்ந்த கோர நிலநடுக்கம் உலகம் முழுவதுமே ஒரு உலுக்கு உலுக்கியிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 2000யைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. தோண்ட தோண்ட பிணக்குவியல்களாக காட்டப்படுகிற காட்சிகள் எந்த மனசையும் தூங்க விடாது.

இரவு நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தவர்களில் பலர், உறக்கத்திலேயே என்ன, ஏது? என்று சுதாரிப்பதற்குள் சொர்க்கத்துக்கு சென்றார்கள். அடுத்தடுத்து கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களில், இன்னும் மீட்பு பணிகள் முழுவதும் முடிவடையாத நிலையில், எத்தனைப் பேர் இறந்திருக்கிறார்கள் என்பதை தெரியவில்லை என்கிற தகவல் மேலும் உலுக்குகிறது. இதுவரையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பலியானவர்களின் எண்ணிக்கை 2012ஆக உயர்ந்துள்ளது.

ரிக்டர் அளவுகோளில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் மாரகேஷ் நகரை கட்டிட குவியலாக்கி உள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை 2012 பேர் வரையில் பலியாகியுள்ளதாகவும், 2059 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மொராக்கோ நிலநடுக்கம்

வீடுகளை இழந்த மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர். பெண்களும், குழந்தைகளும் வீதிகளில் படுத்து உறங்கி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகளை செய்ய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்தகவல் அறிந்த துருக்கி, மொராக்கோவிற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. மேலும், 265 பேர் கொண்ட பேரிடர் மீட்பு படையினரையும் அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து ஓரிரு நாள் கழித்தே முழுமையான விவரம் தெரிய வரும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் அமெரிக்கா உட்பட அதிர்ச்சியையும், பலியானவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்து உதவிக்கரம் நீட்டுகின்றன. காயமடைந்தவர்களில் பலர் அபாய கட்டத்தில் இருப்பதாலும், மீட்பு பணிகள் இன்னும் முழுமையடையாததாலும் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE