உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து 5-வது முறையாக இடம்பிடித்த கும்பகோணம் பேராசிரியருக்கு பாராட்டு

By KU BUREAU

கும்பகோணம்: உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து 5-வது முறையாக இடம் பிடித்த கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரிப் பேராசிரியர் மா.கோவிந்தராஜனுக்கு, கல்லூரி முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.

உலகளவில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஞ்ஞானிகள் பட்டியலை, அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஜான்லொன்னிடிஸ் மற்றும் அவரது குழுவினர் செப்.21-ம் தேதி வெளியிட்டனர். இதில், இடம் பெற்ற 2 லட்சத்துக்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்களில், இந்தியாவில் இருந்து 3,500-க்கும் அதிகமானோர் இடம் பெற்றுள்ளனர்.

இதில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து மாற்றலாகி கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் பணிபுரியும் விலங்கியல் துறை பேராசிரியர் மா.கோவிந்தராஜன், 2024-ம் ஆண்டுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

இவர், நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இயற்கை மருந்துகளை உருவாக்கி டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா மற்றும் ஜிகா வைரஸ்களை பரப்பும் திசையனங்கள் போன்ற கொசுக்களை கட்டுப்படுத்துவதில் முன்னணியில் உள்ளார். மேலும், இவரது ஆராய்ச்சிகள் விவசாய பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறனை சக்தி ஊட்டுவதுடன், மனித நோய்களைத் தடுக்கும் இயற்கை மருந்துகளை உருவாக்க உதவுகிறது.

இவரது ஆராய்ச்சிக்காக 2020, 2021, 2022, 2023 ஆண்டுகளில் தொடர்ந்து உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பெற்ற நிலையில், 5-வது முறையாக 2024-ம் ஆண்டு பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார். இதையடுத்து, பேராசிரியர் மா.கோவிந்தராஜனை, கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் அகிலா நேற்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE