நாளைக்கு ஹாலிடே.... வீட்டிலேயே பீட்சா செய்யலாம்!

By காமதேனு

உலகம் முழுவதும் பிரபலமான துரித உணவென்பது பீட்சா தான். இத்தாலியின் ஏழைகளின் உணவு என்று அழைக்கப்படும் பீட்சா வீடுகளில், உணவகங்களில் ருசித்து சாப்பிடும் உணவாக மாறி விட்டது.

பீட்சா

அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 300 கோடி பீட்சாக்கள் விற்பனையாகின்றன. அதாவது ஒவ்வொரு அமெரிக்கரும் ஒரு வருடத்தில் சராசரியாக 46 பீட்சாக்களைச் சாப்பிடுவதாக கூறப்படுகிறது.

பீட்சா என்பது இன்றைய துரித உணவு என்று நம்பப்படுகிறது. ஆனால், கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே பீட்சா இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன விர்ஜில் எழுதிய எய்னய்ட் என்ற லத்தீன் காப்பியத்தில் பீட்சா வருகிறது.

அதில், ரொட்டித் துண்டுகளில் காட்டில் விளைந்த காளான்கள் மற்றும் மூலிகைகளை தூளாக்கி சாப்பிட்டனர் என்று எழுதப்பட்டுள்ளது. இத்தாலியில் உள்ள நேபிள்ஸ் நகரத்தில் 18-ம் நூற்றாண்டில் நவீன பீட்சாக்கள் அறிமுகமாயின. பூண்டு, பன்றிக் கொழுப்பு, உப்பு, பாலாடைக்கட்டி, துளசி, தக்காளி உள்ளிட்ட பொருட்களைக்கொண்டு பீட்சா அப்போது தான் உருவானது.

பீட்சா

ஏழை மக்களிடம் இருந்து உருவான இந்த உணவு ஒரு காலத்தில் இழிவாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது மேட்டுக்குடி மக்களின் உணவாக அது கலாச்சார மாற்றமடைந்துள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் பீட்சா சென்டர்கள் உருவாகி விட்டன. தமிழகத்தின் குக்கிராமங்களில் கூட பீட்சா விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டு விட்டன. ஆன்லைன் மூலம் வீடுகளைத் தேடி வரும் பீட்சாவை நாம் நினைத்தால் வீட்டிலேயே எளிதாக செய்யலாம். சுத்தம், சுகாதார முறையில் நாமே இந்த பீட்சாவை தயார் செய்து சுவைக்கலாம்.

தேவையான பொருட்கள்

அரிசி மாவில் மிக எளிமையாக வீட்டிலேயே பீட்சா செய்யலாம். அதற்குத் தேவையான பொருட்கள் அரிசி மாவு 2 கப், புழுங்கல் அரிசி அரை கப், தயிர் 2 தேக்கரண்டி, சமையல் சோடா அரை தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, வெங்காயம் 1 (துண்டுகளாக நறுக்கியது), தக்காளி 1( துண்டுகள்), குடைமிளகாய் அரை (துண்டுகளாக நறுக்கியது) கேரட் அரை (துண்டுகளாக நறுக்கியது), பீன்ஸ் - 2 (துண்டுகளாக நறுக்கியது), பாலாடைக்கட்டி, ஸ்வீட் கார்ன் , வெண்ணெய் 1ஸ்பூன், பீட்சா சாஸ் 2 ஸ்பூன் அளவு.

பீட்சா

தயாரிக்கும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, புழுங்கல் அரிசி, உப்பு, தயிர், பேக்கிங் சோடா ஆகியவற்றைக் கலக்கவும். இப்போது தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து மென்மையாக மாவை பிசையவும். மாவை மூடி 15 நிமிடங்கள் ஒதுக்கி வைக்கவும். இப்போது ஒரு சமையல் பாத்திரத்தில் அடுப்பில் வைத்து வெண்ணெய்யை உருக்கவும்.

இதன்பின் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து வெளிர் பழுப்பு நிறம் வரும் வரை வதக்கவும். காய்கறிகளுடன் உப்பு மற்றும் சாஸ் சேர்த்து சிறிது நேரம் சமைக்கவும், பின்னர் அடுப்பை அணைக்கவும். இப்போது தயார் செய்த மாவை பெரிய ரொட்டி போல் உருட்டவும். இப்போது சிறிய சமையல் பாத்திரத்தை (கடாய்) அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து ரொட்டியை லேசாக வறுக்கவும்.

இதன் பின் பேக்கிங் செய்த பிறகு, பீட்சா சாஸை ரொட்டியில் பரப்பவும். அதன் மீது காய்கறிகளைப் பரப்பவும். இப்போது இந்த பீட்சாவை மூடி மூன்று நிமிடங்கள் ஆவியில் வேக விடவும். இதன் பின் உங்கள் அரிசி பீட்சா தயார். இப்போது சாஸைத் தொட்டு பீட்சாவை ருசித்து சாப்பிடலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE