30 சதவீத தள்ளுபடி: விருதுநகர் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்!

By இ.மணிகண்டன்

விருதுநகர்:கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை இன்று தொடங்கியது. இதையொட்டி அனைத்து ரகங்களுக்கும் 30 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

விருதுநகர் தெப்பம் அருகே அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தனது மனைவி பவித்ராவுடன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையைத் தொடங்கிவைத்து கைத்தறி ஆடை ரகங்களைப் பார்வையிட்டார்.

அப்போது ஆட்சியர் ஜெயசீலன் கூறுகையில், "கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருபுவனம் பட்டுச் சேலைகள், கோவை மென்பட்டுச் சேலைகள், பட்டு வேட்டிகள், கைத்தறி சுங்குடிச் சேலைகள், காஞ்சி பருத்தி சேலைகள், கோவை கோரா பருத்தி சேலைகள், சேலம் காட்டன் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், திண்டுக்கல் பருத்தி சேலைகள் மற்றும் அருப்புக்கோட்டை பருத்தி சேலைகள் ஏராளமாக வந்துள்ளன. இளைஞர்களை கவரும் விதமாக லினன் மற்றும் பருத்தி சட்டைகள், லுங்கிகள் மற்றும் வேட்டிகளும் விற்பனைக்கு வந்துள்ளன.

மேலும், மகளிருக்காக சுடிதார் ரகங்கள், நைட்டிகள் மற்றும் குர்தீஸ்கள் பல வண்ணங்களில் விற்பனைக்கு உள்ளன. கைத்தறி ரகங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. கோ-ஆப்டெக்ஸில் மாதாந்திர சேமிப்புத் திட்டமும் நடைமுறையில் உள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.com என்ற இணையதளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். விருதுநகர் விற்பனை நிலையத்தில் சென்ற ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.40.26 லட்சம். இந்த ஆண்டு ரூ.55 லட்சமாக இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது” என்று ஆட்சியர் ஜெயசீலன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE