2 வாரமாக நீடிக்கும் மழையால் தென்காசியில் விவசாய பணிகள் பாதிப்பு

By KU BUREAU

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து வருவதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

கோடை காலத்தில் விவசாயிகள் நிலங்களை உழவு செய்து, சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகினர். இந்நிலையில், மே மாதத்தில் இரண்டாவது வாரத்தில் இருந்து கோடை மழை பெய்யத் தொடங்கியது. இதனால் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறைந்தது. இந்நிலையில் கடந்த 2 வாரமாக மழை நீடிப்பதால் கீழப்பாவூர், சுரண்டை சுற்று வட்டார பகுதிகளில் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை மழை பெய்யும். இந்த காலத்தில் உழவு செய்து வைத்திருப்பது வழக்கம். மே மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசும்போது சாகுபடி பணிகள் தொடங்கப்படும். காற்று காரணமாக விதைகள் முளைப்பது, நாற்றுகள் தளிர்ப்பது நன்றாக இருக்கும்.

இந்த ஆண்டில் மே மாத தொடக்கத்தில் சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஆயத்தமான நிலையில் கோடை மழை பெய்து வருகிறது. மழைக்கு முன்பு சாகுபடி பணிகள் தொடங்கப்பட்ட விவசாய நிலங்கள் தொடர்ந்து ஈரப்பதமாக இருப்பதால் பயிர்கள் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

களைகள் அதிகமாக முளைக்கிறது. அனைத்து வகையான பயிர்களுக்கும் களைக்கொல்லி மருந்து தெளிக்க முடிவதில்லை. ஈரம் காய்ந்தால்தான் களை வெட்ட முடியும். தொடர் மழையால் ஏராளமான விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்க முடியாமல் உள்ளனர்.

உழவு செய்த நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை நின்று தொடர்ந்து 10 நாட்களாவது வெயில், காற்று இருந்தால்தான் நிலத்தை மீண்டும் உழவு செய்து தயார்படுத்த முடியும். கீழப்பாவூர், சுரண்டை சுற்றுவட்டார பகுதிகள் உள்ளிட்ட சில இடங்களில் பெய்து வரும் தொடர் மழையானது ஏற்கெனவே சாகுபடி செய்த விவசாயிகளுக்கும், சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஆயத்தமான விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE