சிவகங்கை: சிவகங்கையில் 'மல்லர் கம்பம்' வீரர்களை அரசு ஊழியர் ஒருவர் உருவாக்கி வருகிறார். மல்லர் கம்பம் பழங்காலம் முதல் வீர விளையாட்டாக இருந்து வருகிறது. உடல், மன வலிமை இருந்தால் மட்டுமே மல்லர் கம்பத்தில் ஏறி சாகசம் செய்ய முடியும். தமிழகத்தில் மறைந்து வந்த மல்லர் கம்பம் தற்போது புத்துயிர் பெற தொடங்கியுள்ளது. இக்கலையை சிவகங்கை ஒன்றிய அலுவலக ஊழியர் நா.கலைச்செல்வம் (25) மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2021-ம் ஆண்டு முதல் சிவகங்கை, காளையார்கோவிலில் இலவசமாக பயிற்சி கொடுத்து வருகிறார். இதுவரை இவரிடம் 70 பேர் பயிற்சியை முடித்துள்ளனர். காலை 6 முதல் 7 மணி வரை பயிற்சி அளித்து வருகிறார். இவரிடம் பயிற்சி பெற்றவர் காளையார்கோவிலைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் சிவனேசன். காது கேளாத மாற்றுத்திறனாளியான அவர் சமீபத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் 2-ம் இடம் பெற்றார்.
இதுகுறித்து பயிற்சியாளர் நா.கலைச்செல்வம் கூறியதாவது: மல்லர் என்பது வீரனை குறிக்கும். கம்பம் என்பது மரத்தை குறிக்கும். சோழ மன்னர்கள் மல்லர் கம்பம் விளையாட்டு மூலமே தங்களது மல்யுத்த வீரர்களின் உடலை உறுதி செய்தனர். ஆனால் இந்த விளையாட்டு காலப் போக்கில் தமிழகத்தில் மறையத் தொடங்கியது.
பிற மாநிலங்களில் இந்த விளையாட்டு பிரபலமாக உள்ளது. கடந்த ஆண்டு தமிழ்நாடு அமெச்சூர் மல்லர் கம்பம் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் பிரமிடு பிரிவில் சிவகங்கை மாணவர்கள் 2-ம் இடம் பிடித்தனர். இந்தாண்டு முதலிடம் பெற்றனர். மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிரா, குஜராத் அரசுகள் இந்த விளையாட்டை அங்கீகரித்துள்ளன.
» 210 மாணவர்களுக்கு மொத்தமே 6 பேராசிரியர்கள்தான் - தாளவாடி அரசு கல்லூரியின் அவலம்
» கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்: விபத்து ஏற்படும் அபாயம்!
தேசிய அளவில் முதல் 3 இடங்களை பெறும் வீரர்களுக்கு மத்திய அரசு விளையாட்டு ஒதுக்கீட்டில் குரூப் ‘சி’ வேலை வழங்குகிறது. இதனால் இந்த விளையாட்டை தமிழக அரசும் அங்கீகரிக்க வேண்டும். பாரம்பரிய விளையாட்டான மல்லர் கம்பத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.