500 ஆண்டு பழமையான மருத்துவ ஓலைச்சுவடிகளை பாதுகாத்து வரும் கோவை சித்த மருத்துவர்!

By ஆர்.ஆதித்தன்

கோவை: தமிழ் மொழியின் வேராக, ஊடக சாதனமாக இருந்த ஓலைச்சுவடிகளை கிராமம் தோறும் தேடித் தேடி கண்டுபிடித்து உ.வே.சாமிநாதய்யர், மீனாட்சி சுந்தரம் போன்ற அறிஞர்கள் தமிழ் இலக்கியங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர். அந்தவகையில் ஓலைச்சுவடிகளை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. கல்வெட்டுகளை விட ஓலைச்சுவடிகளை பாதுகாப்பது சவாலானது.

ஆனால், கோவை மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் ஆலாந்துறை அருகில் நொய்யல் ஆற்றங்கரையை ஒட்டியுள்ள கள்ளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 72 வயதான ஞானசெளந்திரம் சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஓலைச்சுவடிகளை பாதுகாத்து பத்திரமாக சேமித்து வைத்துள்ளார்.

இவர் 7-வது தலைமுறையாக மருத்துவக் குறிப்புகள், மனையடி சாஸ்திரம், சிற்பக்கலை உள்ளிட்ட பல்வேறு குறிப்புகளை ஓலைச்சுவடி களில் இருந்து படித்து சித்த மருத்துவம் செய்து வருகிறார்.

தமிழக சித்த மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்றவரும், இம்ப்காம்ப்ஸ் அமைப்பில் உறுப் பினருமான தி.ஞானசெளந்திரம் கூறியதாவது: எனது தந்தை திருமூர்த்தி சித்தர் ஆவார். அவரை குருவாக ஏற்றுக்கொண்டு ஓலைச்சுவடிகளை படித்து குறிப்பெடுத்தல், மருத்துவம், ஜோதிடம் உள்ளிட்ட பல கலைகளை கற்றுக்கொண்டேன். எனது தந்தையின் மறைவுக்குப் பிறகு முழுமை யாக ஓலைச்சுவடிகளை பாதுகாத்தல், ஓலைச்சுவடி களை படித்து குறிப்பெடுத்தல், கல்லூரிகளுக்கு சென்று ஓலைச்சுவடி எப்படி படிப்பது போன்ற விளக்கங்களை அளித்துள்ளேன்.

எனது தந்தை பாதுகாத்துவந்த 1512-ம் ஆண்டில் எழுதப்பட்ட, அதாவது சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஓலைச்சுவடிகளை பாதுகாத்து வருகிறேன். இதில் புலிப்பாணி சித்தர், மச்சமுனி உட்பட பல்வேறு சித்தர்கள் அருளிய ஓலைச்சுவடி மருத்துவக் குறிப்புகள் அடங்கும். எங்கள் வீட்டில் பராமரித்துவந்த ஓலைச்சுவடிகள் குறித்து அறிந்த தொல்லியல் துறையினர் வீட்டுக்கு வந்து ஓலைச்சுவடிகளை மின் உருவாக்கம் செய்து தொகுத்துள்ளனர். மேலும் ஓலைச்சுவடிகள் அழிந்து விடாமல் பாதுகாக்கும் வகையில் புதுப்பித்து கொடுத்து சென்றனர்.

சித்த மருத்துவ ஓலைச்சுவடிகள்.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை உதவியுடன் தற்போது 350-க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை பாதுகாத்து வைத்துள்ளேன். ஓலைச்சுவடிகளில் உள்ள குறிப்புகள் அனைத்தையும் தமிழ் சமூகத்திற்கு கொண்டு செல்லும் வகையில் எளிய முறையில் குறிப்புகளாக பல ஆயிரம் பக்கங்களில் எழுதி வைத்துள்ளேன். தற்போது நேரம் கிடைக்கும் போது ஓலைச்சுவடிகளுக்கு தமிழ் விளக்க குறிப்புகளை எழுதி வருகிறேன்.

எனது சகோதரி அமராவதிக்கு ஓலைச்சுவடி குறிப்புகள் மனப்பாடமாகத் தெரியும். அவர் உதவியுடன் ஓலைச்சுவடி குறிப்புகளில் இருந்து மருந்துகள் தயாரித்து வருகிறேன். எனது மனைவி கலைச்செல்வி, மகன் சுரேஷ் ஆகியோரும் ஓலைச்சுவடி குறிப்புகளை எடுத்து தந்து உதவி வருகின்றனர்.

ஒருமுறை இலங்கையில் இருந்து ஓலைச்சுவடிகளை கொண்டு வந்து படித்து விளக்க குறிப்பு எழுதி தருமாறு கேட்டனர். அந்தப் பணி மிகவும் சவாலாக இருந்தது. கடினமான தமிழ் சொற்களுக்கு எளிமையாக விளக்கக் குறிப்புகளை எழுதி கொடுத்தேன். இதுபோல தமிழகம் முழுவதும் இருந்து ஓலைச் சுவடிகளுக்கு விளக்க குறிப்புகளை கேட்டு அணுகி வருகின்றனர்.

சித்த மருத்துவ ஓலைச்சுவடிகளுக்கு எழுதப்பட்ட
விளக்க குறிப்புகளின் புத்தக தொகுப்பு.

ஓலைச்சுவடிகளில் பல்வேறு நோய்களுக்கு சித்தர்கள் அருளிய மருத்துவக் குறிப்புகள் மூலம் மருந்து தயாரித்து கொடுத்து குணப்படுத்தி வருகிறேன். ரசவாத கலை, ரச கட்டுகள் போன்ற எண்ணற்ற மருத்துவக் குறிப்புகளும் உள்ளன.

அதேவேளையில், முன்பெல்லாம் வயல் வெளிகள், தோட்டங்களில் சாதாரணமாக கிடைத்துவந்த மூலிகைகள் இப்போது தேடி கண்டுபிடிக்கும் அளவுக்கு அரிதாகிவிட்டது. இதற்கு தோட்டத்தில் தெளிக்கும் களைக்கொல்லி போன்ற ரசாய னங்கள் முக்கியமாகும். களைக்கொல்லி ரசாயனங்களால் மூலிகைகளும் அழிந்து விடுகின் றன. பாரம்பரிய சித்த மருத்துவத்தில் ஈடுபடும் அனைவரும் ஏழ்மை நிலையில் உள்ளனர்.

இதனால் அவர்கள் பாரம்பரிய சித்த மருந்துகளை செய்ய அதிகம் செலவிடும் நிலை உள்ளது. மேலும் அரியவகை மூலிகைகள் கிடைப்பது இல்லை. எனவே, அரிய வகை மூலிகை களை வளர்த்து பாரம்பரிய சித்த மருத்துவர்களுக்கு தமிழக அரசு நேரடியாக வழங்க வேண்டும். அப்போதுதான் அரிய வகை மூலிகைகளையும், பாரம்பரிய சித்த மருத்துவத்தையும் காப்பாற்ற முடியும்.

சித்த மருத்துவ ஓலைச்சுவடிகளில் உள்ள
பழமையான தமிழ் எழுத்துகள்.

நான் வசிக்கும் அதே கிராமத்தில் தந்தை திருமூர்த்தி ஜீவசமாதியும் உள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து அவரின் முழு உருவ சிலையை வடித்து எடுத்து வைத்து வழிபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் தமிழ்நாடு ஓலைச்சுவடி பாதுகாப்பு குழுமத்தின் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் கூறும்போது, "தமிழகத்தில் ஆதீனங்கள், தனி நபர்களிடம் உள்ள ஓலைச்சுவடிகளை மின் உருவாக்கம் செய்து வருகிறோம்.

குறிப்பாக பேரூர் ஆதீனத்தில் உள்ள 80 ஆயிரம் பக்கங்களும், ஆலாந்துறையில் உள்ள பாரம்பரிய சித்த மருத்துவர் தி.ஞானசெளந்திரத்திடம் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களும் மின் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஓலைச்சுவடியின் இரு பக்கங்கள், வரிகள், தலைப்பு, நீளம், அகலம் என அனைத்தும் மின் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஓலைச்சுவடிகளை தேடி சென்று மின் உருவாக்கம் செய்து வருகிறோம். அழியும் நிலையில் உள்ள ஓலைச்சுவடிகளை புதுப்பித்துக் கொடுத்து வருகிறோம்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE