டெல்லியில் மோசமான வானிலை... திருப்பிவிடப்பட்ட 18 விமானங்கள்!

By காமதேனு

மோசமான வானிலை காரணமாக டெல்லியில் தரையிரங்க முடியாமல் 18 விமானங்கள் பல்வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.

டெல்லியில் மோசமான வானிலை

இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் டெல்லி விமான நிலையம் வெளியிட்டுள்ள தகவலில், 'இன்று காலை 8.10 மணியளவில் வான் பரப்பு மிகக் குறைந்த அளவிலேயே தெளிவாக தெரிந்தது' என குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “இன்று காலை மோசமான வானிலை காரணமாக 18 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் அனைத்தும் ஜெய்ப்பூர், லக்னோ, அஹமதாபாத், அம்ரித்சர் ஆகிய நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன” என்றனர்.

தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மோசமான வானிலை நிலவுகிறது. நகரின் பல்வேறு இடங்கள் புகையால் சூழப்பட்டுள்ளது. ஆனந்த விகார், அசோக் விகார் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இன்று காலை 6 மணி அளவில் ஆனந்தவிகாரில் காற்றின் தரம் 388 ஆகவும், அசோக் விகாரில் 386 ஆகவும் பதிவாகியுள்ளது.

விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-வது முனையப் பகுதியில் காற்றின் தரம் காலை 10 மணி நிலவரப்படி 375 ஆக பதிவாகியுள்ளது.

காற்று தர அட்டவணைப்படி, 0 முதல் 100 வரை சிறந்ததாகவும், 100 முதல் 200 வரை நடுத்தரமானதாகவும், 200 முதல் 300 வரை மோசமானதாகவும், 300 முதல் 400 வரை மிக மோசமானதாகவும், 400 முதல் 500 அல்லது அதற்கு மேல் உள்ளவை கடும் தீவிரமானதாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE