ஃபிட்னஸ் பிரபலம் மாரடைப்பால் மரணம்... மர்மச்சாவு என போலீஸ் சந்தேகம்!

By காமதேனு

பிரேசிலின் பிரபல ஃபிட்னஸ் ஆலோசகரும், பிரபல மாடலுமான லாரிசா போர்ஜஸ் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, மர்மம் மரணமாக போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

லாரிசா போர்ஜஸ்

எப்போதும் உடற்பயிற்சியிலும், தனது உடலின் மீதும் மிகுந்த கவனம் செலுத்தி வந்தவர் லாரிசா போர்ஜஸ்(33). பிரேசிலைச் சேர்ந்த ஃபிட்ன்ஸ் ஆலோசகரான லாரிசா, பிரபல மாடலாகத் திகழ்ந்தார். உடற்பயிற்சி வீடியோக்கள் மூலம் பிரபலமானவர்.

உடலை எப்படி கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள வேண்டும் என்று இவர் அளிக்கும் ஃபிட்னஸ் டிப்ஸ்கள் பிரேசில் மக்களிடையே பிரசித்தி பெற்றது. Larissa Borges என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபிட்னஸ், ஃபேஷன் மற்றும் படகுப் பயணம் குறித்து லாரிசா புகைப்படம், வீடியோக்களைப் பதிவிட்டு வந்தார்.

லாரிசா போர்ஜஸ்

இந்நிலையில், ஆக.20-ம் தேதி கிராமடோவில் அவர் பயணம் செய்யும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின் போது கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு இரண்டாவது மாரடைப்பு ஏற்பட்டு ஒரு வாரத்திற்குப் பின் உயிரிழந்ததாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.

அவர் இறந்த செய்தியை லாரிசாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்." 33 வயதில் இத்தகைய அன்பானவளை இழந்த வலியை விவரிக்க முடியாது. எங்கள் இதயங்கள் உடைந்து விட்டன. நாங்கள் அனுபவிக்கும் வலி விவரிக்க முடியாது. தனது உயிரைக் காக்க தைரியமாக லாரிசா போராடினார்" என்று அதில் பதிவிட்டுள்ளனர்.

லாரிசா போர்ஜஸ்

இந்நிலையில் லாரிசா போர்ஜஸ் மரணத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மாரடைப்பு ஏற்படும் முன் அவர் குடிபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE