அதிர்ச்சி... 33 வயதில் பிட்னஸ் பிரபலம் மாரடைப்பால் மரணம்!

By காமதேனு

சமீபகாலமாக மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், 33 வயதேயான பிட்னஸ் பிரபலம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலங்களாக இளம் வயது மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகின்றன. விளையாடிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பு, பள்ளியில் மாணவர்களுக்கு மாரடைப்பு என்று அதிர்ச்சியளிக்கும் வகையில், இளம்வயதினர் அதிகளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழக்கின்றனர்.

இந்நிலையில், பிட்னஸ் பிரபலம் 33 வயதில் மரணமடைந்திருப்பது உடற்பயிற்சி ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.

லரிசா போர்கேஸ்

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் லரிசா போர்கேஸ். பிட்னஸ், பேஷன், டிராவல் குறித்த தகவலை அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு பெண் இன்புளூயன்சராக திகழ்ந்தவர். இவரது பிட்னஸ் சம்பந்தமான பதிவுகள் இளைய தலைமுறையினரை ஈர்க்கவே, வெகு விரைவில் லட்சக்கணக்கான பாலோயர்ஸ் குவிந்தனர்.

இந்நிலையில், ஏற்கனவே ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்ட சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தற்போது 2 வது முறையாக மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி தனது 33 வயதில் லரிசா போர்கேஸ் மரணமடைந்துள்ளார். இந்த தகவலை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லரிசா போர்கேஸின் குடும்பத்தினர் பதிவிட்டுள்ளனர்.

லரிசா போர்கேஸ்

அந்தப் பதிவில் "33 வயது நிரம்பிய, மிகவும் அன்பான ஒருவரை இழந்த வலி மிகுந்தது. எங்கள் இதயங்கள் உடைந்து விட்டன. அவர் இல்லாத எங்களின் ஏக்கம் விவரிக்க முடியாதது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 20ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், அப்போது அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அதே நிலையில் மீண்டும் 2வது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. முதல் மாரடைப்பு ஏற்பட்டபோது லரிசா போர்கேஸ் மது அருந்தி இருந்ததாக தெரிவித்துள்ளனர். அவரது மறைவிற்கு ரசிகர்கள், தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE