மதுரை அருகே கடவுளாக போற்றப்படும் வெள்ளமலை காடு - ஒரு விசிட் பார்வை!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் அம்பலக்காரன் பட்டி மற்றும் குறிச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வெள்ளமலை அமைந்துள்ளது. கிழக்கில் தேவன் பெருமாள்பட்டி தொடங்கி, மேற்கில் வளையராதினிபட்டி வரை 9 கி.மீ. நீளமும், 1 கி.மீ. அகலமும், சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவும் கொண்டதாக, இந்த வெள்ளமலை நீண்டு உள்ளது. உயரம் அதிகமில்லாத வெள்ள மலை காட்டில் புள்ளிமான், கடமான், தேவாங்கு, உடும்பு உள்ளிட்ட காட்டு விலங்குகள் பரவலாகக் காணப்படுகின்றன.

இந்த பகுதிக்கு, மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அவர்களுடன் பொதுமக்களும் பண்பாட்டுச் சூழல் நடை மேற்கொண்டனர். இந்த பயணத்தில் பங்கெடுத்தவர்கள், புள்ளிமான்களையும், கடமான்களையும், உடும்பையும் கண்டு மகிழ்ந்தனர்.

இந்த மலையில் கண்ட ருசிகர நிகழ்வுகளையும், கிராம மக்களுடைய பாரம்பரிய வழக்கங்களையும் பற்றி மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் தமிழ்தாசன் கூறியதாவது:வெள்ளமலையில் கன்னிமார்தேவி கோயில், வங்கொலைக்காரி கோயில், அய்யனார் கோயில், சடைமுனியன், அரசர் சுவாமி கோயில், வெள்ளமலை கோயில், மலை ஈஸ்வர், ஆகாய வெள்ளமலை கோயில், முருகன் கோயில், காளி கோயில், நான்கு விளக்குத்தூண் போன்ற கிராம கோயில்கள் உள்ளன.

இதை இக்கிராமத்து மக்கள் வெள்ளமலை கோட்டை, கோயில் காடு என்று கூறுகின்றனர். கோயில் காடு என்பது தங்கள் தெய்வத் துக்குரிய நிலம் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால், இக்காட்டுக்குள் செல்வதற்கு ஊர் மக்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை ஊர் சபையின் வாயிலாக விதித்துள்ளனர்.

காட்டில் செருப்பணிந்து செல்லக் கூடாது, காட்டில் உள்ள மரங்களை வெட்டக் கூடாது, காட்டில் உள்ள எந்த விலங்குகளையும் வேட்டையாடக் கூடாது என்பன உள்ளிட்ட ஊர்க் கட்டுப்பாடுகள் பன்னெடுங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. கோயில் காட்டை

பாதுகாக்க ஊரிலிருந்தே காவலுக்கு ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்குச் சான்றாக 1962-ம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியர், வெள்ளமலை எவ்வாறெல்லாம் வெள்ளலூர் நாட்டு மக்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதை குறிப்பிட்டு எழுதிய பரிந்துரைக் கடிதம் உள்ளது. ‘வெள்ளமலைக் காட்டில் காற்றடித்து விழுந்த மரங்களாயினும், பட்டுப்போன மரங்களாயினும் அதை தங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்துவது தெய்வக்குற்றமாகிவிடும் என்று மக்கள் நம்புகின்றனர்.

அதனால், இந்த மரங்களை கோயில் காரியங்களுக்காக மட்டுமே யன்படுத்தப்படுகின்றன. அதுவும் இரு ஊர்சபை மற்றும் மக்கள் சம்மதம் தெரிவித்த பின்னரே பயன்படுத்தப்பட்டது’ என்று, மதுரை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையோடு கடந்த 1963-ல் அரசாணை வெளியிடப்பட்டது. இதை அறிவிப்பு பலகையாக வெள்ளமலை காட்டின் நுழைவு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது.

காட்டை பாதுகாக்க காவலர்களை நியமித் துள்ள இவர்கள், காட்டையும், காட்டு உயிர்களையும் பாதுகாக்க அரசின் வனத்துறை என்னென்ன வகையில் செயல்படுமோ, அதேபோல் இம்மக்கள் இந்த காட்டை பாரம்பரி யமாக பாதுகாத்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வெள்ளமலையில் 5,000 பேரை கொன்ற ஆங்கிலேயர்கள்: தமிழ்தாசன் மேலும் கூறியதாவது: 260 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த வரிகொடா போராட்டம் முக்கியமானது. இதில் ஆங்கிலேயப் படை அக்காலத்தில் 63 கிராமங்களை உள்ளடக்கிய வெள்ளலூர் நாட்டைச் சேர்ந்த 5,000 பேரை இழுத்து வந்து இந்த வெள்ளமலையில் கொன்றுள்ளது.

தமிழ்தாசன்

முதலில் இந்த வரிகொடா போரில் 3,000 பேரை கொன்றுள்ளனர். அதன்பிறகு 10 ஆங்கிலேய வீரர்களை அனுப்பி, மற்றவர்களை வரி கட்டச் சொல்லி மிரட்டியுள்ளனர். ஆனால் பழிக்குப் பழியாக அந்த 10 ஆங்கிலேய வீரர்களையும் வெள்ளலூர் நாட்டு மக்கள் கொன்றுள்ளனர். இதனால் கோபமடைந்த கேப்டன் ரூம்லே, பெரும் படையை அனுப்பி 2,000 பேரை கொன்றுள்ளார்.

இவ்வாறு வரிகொடா போரில் பங்கேற்று வெள்ளலூர் நாட்டைச் சேர்ந்த 5,000 பேர் உயிரிழந்த நினைவை போற்றும் விதமாக, வெள்ளமலையில் நினைவுத்தூண், வளைவு, மணிமண்டபம் எழுப்ப மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE