அதிர்ச்சி... பெண்களிடையே மாரடைப்பு 21 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அதிகரிப்பு!

By காமதேனு

35 முதல் 54 வயதுடைய பெண்களிடையே மாரடைப்பு 21 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா உட்பட 50 நாடுகளில் நடத்தப்பட்ட 15 ஆய்வின்படி இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என கண்டறியப்பட்டுள்ளது. வாந்தி, தாடை வலி மற்றும் வயிற்று வலி போன்றவை இதய நோய்க்கான பொதுவான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் மருத்துவர்களால் அல்லது நோயாளிகளால் கவனிக்கப்படாமல் விட்டால் நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு தாமதமாகிறது.

இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் ஸ்கூல் ஆஃப் மருத்துவ பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் ஜுக்கர் பெர்க் கூறுகையில், "இருதய நோய், சிகிச்சை மற்றும் அறிகுறிகளைக் கண்டறிவதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே பிரமிக்க வைக்கும் வித்தியாசங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம். அப்படி அறிகுறிகள் தோன்றிய பிறகு பெண்கள் ஆண்களை விட தாமதமாக மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். மேலும் ஆண்களுக்கு நிகரான விகிதத்தில் பெண்களை மருத்துவமனையில் மருத்துவர்கள் அனுமதிப்பதில்லை.

இதய நோய்

சமீபத்திய ஆண்டுகளில், 35 முதல் 54 வயதுடைய பெண்களிடையே மாரடைப்பு 21 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் ஆண்களின் விகிதம் 30 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக மட்டுமே உயர்ந்துள்ளது.

கரோனரி தமனி நோயல் பாதிக்கப்பட்ட சுமார் 15,000 நோயாளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இளம் நோயாளிகளில், பெண்கள் 30 நாட்களுக்குள் இறக்கும் அபாயம் ஆறு மடங்கு அதிகமாக உள்ளது" என்றார்.

முன்கூட்டிய மாதவிடாய், கர்ப்பகாலத்தில் உயர் ரத்த அழுத்த கோளாறுகள் பெண்களுக்கு இதய நோய்க்கான முக்கிய காரணிகளாக உள்ளன. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாண மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளிடையே ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

அதில், பெண் மருத்துவர்களால் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது, அவர்களின் இறப்பு விகிதம் 11.9 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டது என்று முடிவுகள் காட்டுகின்றன. அறிகுறிகள், மருத்துவமனையில் அனுமதி, நோயறிதல் மற்றும் சிகிச்சைகள் ஆகியவற்றில் ஆண்களை விட மோசமான விளைவுகளை இதய நோயால் பாதிக்கப்படும் பெண்கள் அனுபவிக்கின்றனர் என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE