மதுரை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... வைகை அணையில் தண்ணீர் திறப்பு!

By காமதேனு

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக 2,000 கன அடி தண்ணீர் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வைகை அணை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஒருபோக பாசனத்திற்காக அணையில் இருந்து பாசனக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

மதுரை வைகை ஆறு

இந்தநிலையில், சிவகங்கை மாவட்ட இரண்டாம் பூர்வீக பாசனத்திற்காக இன்று வினாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் உள்ள பிரதான 7 முழு சிறிய சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இன்று முதல் டிச. 5-ம்தேதி வரையிலான ஐந்து நாட்களுக்கு ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல் 2 நாட்களுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியும், மூன்றாம் நாள் வினாடிக்கு 1,500 கனஅடியும், நான்காவது நாளில் வினாடிக்கு 1,000 கனஅடியும், ஐந்தாவது நாளில் வினாடிக்கு 665 கனஅடியும் திறக்கப்பட உள்ளது.

இந்த ஐந்து நாட்களில் வைகை அணையில் இருந்து 619 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனைத்தொடர்ந்து வைகை பூர்வீகப் பாசனப்பகுதியான மதுரை மாவட்டத்துக்கு டிச.6-ம் ந்தேதி முதல் 8-ம்தேதி வரை மூன்று நாட்கள் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE