விஜய்காந்த் உடல் நிலையில் திடீர் பின்னடைவு: குடும்பத்தினருடன் மருத்துவர்கள் அவசர ஆலோசனை!

By காமதேனு

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினருடன் மருத்துவர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விஜயகாந்த்-பிரேமலதா

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் மியாட் மருத்துவமனை தரப்பில் நேற்று மதியம் வெளியிடப்பட்ட அறிக்கையில் ‘’ விஜயகாந்தின் உடல் நிலை சீராக இல்லை’’ என தெரிவித்திருந்தனர். இதனால் அவரது ரசிகர்கள் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பிரேமலதா

இதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘’மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கேப்டன் உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை வழக்கமான ஒன்றுதான். இதில் பதற்றம் அடையவோ, பயப்படவோ ஒன்றுமில்லை. கேப்டன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.

மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருடன் நானும் இருந்து தலைவரை நல்லபடியாக பார்த்து வருகிறேன். தலைவர் அவர்கள் பூரண நலம் பெற்று வீடு திரும்பி நிச்சயமாக உங்களை சந்திப்பார் என்று தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருடைய பிரார்த்தனையும், அவர் செய்த தர்மமும் தலைவரை நிச்சயம் காப்பாற்றும்" என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ளது. திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினருடன் மருத்துவக் குழு அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளது. விஜயகாந்துக்கு கூடுதல் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE