நாகர்கோவில்: ஓணத்தை முன்னிட்டு இரு தினங்களில் 16,500 சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். பண்டிகை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். நேற்று ஓணம் பண்டிகையையொட்டி கேரளா மற்றும் குமரி மாவட்டம், மற்றும் பிற பகுதிகளில் இருந்தும், நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் என சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் கன்னியாகுமரிக்கு வந்திருந்தனர். இதனால் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சுற்றுலாப் பயணிகள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு இல்லத்தில் இருந்து படகு பயணம் மேற்கொண்டு பார்வையிட்டு திரும்பினர். ஓணம் பண்டிகை அன்று மட்டும் 8 ஆயிரம் பேர் படகில் விவேகானந்தர் பாறைக்கு சென்று வந்தனர்.
இன்று (திங்கட்கிழமை) 8 ஆயிரத்து 500 சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பியதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்தனர். முந்தைய நாட்களை விட அதிகமாக சுற்றுலாப் பயணிகள் இரு நாட்களிலும் படகு சவாரி செய்துள்ளனர். ஓணம் பண்டிகையையொட்டி 2 நாட்களில் மட்டும் 16 ஆயிரத்து 500 பேர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர்.