தந்தையின் மெழுகுச் சிலை சாட்சியாக திருமணம் செய்துகொண்ட மகன் - மதுரையில் நெகிழ்ச்சி

By என்.சன்னாசி

மதுரை: காலமாகிவிட்ட தனது தந்தையின் மெழுகுச் சிலையை சாட்சியாக வைத்துக்கொண்டு மகன் திருமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வலங்காகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பின்னத்தேவர் - ஜெயா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். பின்னத்தேவர் சிறு வயதில் இருந்தே மதுரை பரவை மார்க்கெட்டில் காய்கறி மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருந்து பிறகு காய்கறி கடை ஒன்றை நடத்தினார். சிறு வயதில் இருந்தே கடுமையாக உழைத்து அவர், தனது இரு மகன்களை படிக்க வைத்ததோடு வீடு, கார் உள்ளிட்ட குடும்பத்திற்கு தேவையான வசதி வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுத்தார்.

எனினும் தான் மட்டும் எளிமையாக வாழ்ந்ததுடன் ஏழை மக்களுக்கும் தன்னாலான உதவிகளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது மூத்த மகனான சிவராமனுக்கு திருமணம் செய்து வைக்க வரன் பார்த்த்துக் கொண்டிருந்த பின்னத்தேவர், கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்க பின்னத்தேவரின் ஆசையை நிறைவேற்ற அவரது குடும்பத்தினர் சிவராமனுக்கு ஒட்டன்சத்திரம் பகுதியில் பெண் பார்த்து நிச்சயம் செய்தனர்.

இதையடுத்து மதுரை செல்லூரில் இன்று சிவராமனின் திருமணம் நடந்தது. தனது திருமணத்தில் ஆத்மார்த்தமாக தந்தையும் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தார் சிவராமன். இதற்காக சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்பில் தனது தந்தை பின்னத் தேவரின் முழு உருவ மெழுகுச் சிலையை உருவாக்கினார். இன்று தனது திருமண மேடையில் தந்தையின் மெழுகுச் சிலையை பிரதானமாக நிற்க வைத்தார் சிவராமன். தந்தையின் அருகே தாயார் ஜெயாவை நிறுத்தி அவர்களுக்கு முன்பாக சிவராமன் தனது மனைவி கழுத்தில் தாலி கட்டினார்.

இதைக் கண்டு மெச்சிய சுற்றமும் நட்பும் மணமக்களை வியப்புடன் வாழ்த்திச் சென்றனர். பிறகு, மணமக்கள் பின்னத் தேவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். அப்போது தந்தையின் சிலையைப் பார்த்து சிவராமன் கண்கலங்கி முத்தமிட்ட காட்சி விழாவுக்கு வந்திருந்தவர்களை நெகிழச் செய்தது. தொடர்ந்து மணமக்களை பின்னத் தேவர் சிலையின் அருகில் வைத்தே புகைப்படம் எடுத்தனர்.

இதுகுறித்து சிவராமன் கூறுகையில், "எனது தந்தை எளிமையாக வாழ்ந்தவர். எங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் தற்போது திருமணம் செய்துள்ளேன். எங்களுக்கு எல்லாமும் செய்து கொடுத்த தங்கள் தந்தையின் ஆசிர்வாதத்துடன் திருமணம் நடத்த வேண்டும் எனக் கருதி மெழுகுச் சிலையை உருவாக்கி சென்னையில் இருந்து வரவழைத்தேன். தந்தை உயிருடன் இருப்பதாகவே கருதி, அவரது சிலை சாட்சியாக நான் எனது மனைவி கழுத்தில் தாலி கட்டினேன்” என்று சிவராமன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE