தென் மாவட்டங்களில் கோடைக்கு இணையாக வாட்டி வதைக்கும் வெயில்!

By KU BUREAU

திருநெல்வேலி / தென்காசி: திருநெல்வேலி உட்பட நான்கு தென் மாவட்டங்களிலும் கடந்த 10 நாட்களாக வெயில் வாட்டி வதைக்கிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தை நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (15-ம் தேதி) முதல் 21-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்றும் (15-ம் தேதி), நாளையும் வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு உயரக்கூடும்.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல்பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று அதிகபட்சமாக மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று வறண்ட வானிலை நிலவியது.

நேற்று பகலில் பதிவான அதிகபட்ச வெப்ப நிலை வருமாறு: திருநெல்வேலியில் 98 டிகிரி, தூத்துக்குடியில் 99, தென்காசியில் 88, நாகர்கோவிலில் 89 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கடும் வெயில் காரணமாக காற்று அனலாக வீசியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்றாலும், நல்ல முகூர்த்த தினம் மற்றும் திருவோணம் பண்டிகை நாள் என்பதாலும், ரயில்கள் மற்றும் பேருந்துகளில் நேற்று காலை முதலே கூட்டம் அலைமோதியது. காலை 9 மணி முதலே வெயில் கொளுத்தியதால் பயணிகள் கடும் அவதியுற்றனர். நேற்று மதியத்துக்குப் பிறகு மாநகர சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. இரு சக்கர வாகனப் போக்குவரத்தும், பாதசாரிகள் நடமாட்டமும் சுத்தமாக நின்று போனது.

தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த ஒருவாரமாக ஆங்காங்கே சாரல் மழை பதிவாகி வந்தது. நேற்று எந்தப் பகுதியிலும் மழை அளவு பதிவாகவில்லை. எனினும், தென் மாவட்ட அணைகளில் நீர் இருப்பு போதுமான அளவு இருப்பதால், குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தட்டுப்பாடு ஏற்படப் போவதில்லை.

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை பெய்யும். மலைப் பகுதியில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த ஆண்டில் ஜூன், ஜூலை மாதங்களில் சாரல் சீஸன் களைகட்டியது. ஆகஸ்ட் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் மீண்டும் சாரல் மழை களைகட்டியது.

ஆனால், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. விடுமுறை தினமான நேற்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அருவிகளில் விழும் மிகக்குறைந்தளவு தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர்.

இதுபோல், பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவி ஆகிய சுற்றுலா மையங்களில், மக்கள் கூட்டம் அலைமோதியது. திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி மலை நம்பி கோயிலுக்கு சென்று நம்பியாற்றின் குளிர்ந்த நீரில் நீராடநேற்று முன்தினம் ஏராளமானோர் திரண்டர். ஆற்றில் மிதமான அளவு தண்ணீர் ஓடுகிறது. வரும் நாட்களிலும் வெப்பநிலை சில டிகிரிகள் உயரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், மக்கள் மழையை எதிர்பார்த்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE