விபத்தில் சிக்கிய 60 பேரை காப்பாற்றிய செஞ்சிலுவை சங்க முன்கள பணியாளர்!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: பெரும்பாலான விபத்துகளில் சரியான முதலுதவி கிடைக்காததே மனித உயிரிழப்புக்குக் காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், உயிரிழப்புகளைத் தடுக்க அனைவரும் சில நிமிட முதலுதவிகளை அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

வீடுகள் முதல் சாலைகள், பொது இடங்களில் யாரும் எந்த நேரத்திலும் திடீரென விபத்து, மாரடைப்பைச் சந்திக்கலாம். அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முனைப்புக் காட்டுவோர், அவசர உதவி வாகனங்கள் வரும் வரை சில அடிப்படையான முதலுதவிகளைச் செய்ய போதிய விழிப்புணர்வின்றி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இதை தவிர்த்து உயிரைக் காக்க அடிப்படையான முதலுதவி குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் செப்டம்பர் 2-வது சனிக் கிழமை உலக முதலுதவி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளை, மற்ற உலக விழிப்புணர்வு நாட்களைப்போல் மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் மதுரை ஆட்சியர் தலைமையில் செயல்படும் இந்திய செஞ்சிலுவைச் சங்க கிளை சார்பில் இன்று (செப்.14) மதுரை தமுக்கத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில், விபத்தின்போது மேற்கொள்ள வேண்டிய முதலுதவி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, இதய அடைப்பின்போது செய்யப்படும் சிபிஆர் (CPR) செயல்முறை பற்றிய விளக்கத்தைப் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் என செஞ்சிலுவைச் சங்கச் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்தார்.

ராஜ்குமார்

இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக விபத்து, பேரிடரின்போது தன்னார்வமாகச் சென்று முதலுதவி செய்து வருகிறேன். விபத்து நிகழ்ந்த இடங்களில் இறக்கும் தருவாயில் இருந்தவர்கள் 60 பேர் வரை மீட்டு முதலுதவி அளித்து நான் காப்பாற்றியிருக்கிறேன்.

2017-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகள் குறையத் தொடங்கியதற்கு, செஞ்சிலுவைச் சங்க தன்னார்வலர்களின் முதலுதவிகளே முக்கியக் காரணம். இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் ஜல்லிக்கட்டில் மட்டும் 300-க்கும்மேற்பட்டோரைக் காப்பாற்றியிருப்போம். எல்லோருக்கும் முதலுதவி தெரிந்திருக்க வேண்டும். நமது குடும்பத்தினர்களுக்கு பயன்படும் வகையிலாவது முதலுதவி பற்றி அறிய வேண்டும். விபத்துகளில் குறைவான காயம் ஏற்பட்டாலும்கூட அதிக ரத்த இழப்பால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

அதனால், விபத்து நடந்த இடத்தில் கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்தே ரத்த இழப்பைத் தடுக்கலாம். சாதாரண துணியைக் கொண்டு ரத்தம் வெளியேறும் இடத்தில் கட்டினால்கூட ரத்த இழப்பை தடுக்கலாம். நீரில் மூழ்கியோர், மயக்கமடைவோர், மாரடைப்பு மற்றும் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டோரை முதலுதவியால் எளிதாகக் காப்பாற்றலாம். உயிருக்கு போராடுவோரை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் வழியில் எதுவுமே செய்யமாட்டார்கள்.

அதனால், காயத்தின் தீவிரம் அதிகமாகி மருத்துவர்கள் போராடினாலும்கூட உயிரை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். ஆம்புலன்ஸ், வாகனங்கள் வரும்வரை பாதிக்கப்பட்டோருக்கு முதலுதவி சிகிச்சை செய்துவிட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வையுங்கள். மயக்கம் வந்தால், என்ன செய்வது என்று தெரியாமல் சிலர் சோடா மற்றும் தண்ணீரை முகத்தில் அழுத்தமாக அடிக்கின்றனர். சோடாவை கொண்டு அடிக்கக் கூடாது. தண்ணீரை மென்மையாகத் தெளிக்கவேண்டும். ரத்தஓட்டம் மூளைக்கு சென்றடையாததாலேயே மயக்கம் வருகிறது. இந்த அடிப்படையான செயல்கள் தெரியாமல் முதலுதவிகளைச் செய்யக்கூடாது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE