தாக்கும் ஜெல்லி மீன்கள்... சாமியார்பேட்டை கடல் பகுதி ஆபத்தானதா?

By க. ரமேஷ்

கடலூர்: பரங்கிப்பேட்டை அருகே உள்ளது சாமியார்பேட்டை மீனவ கிராமம். கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு அடுத்ததாக மிக நீண்ட பரப்பை கொண்டது இந்த கடற்கரை பகுதி.

விடுமுறை நாட்களில் கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, சிதம்பரம், குமராட்சி,காட்டுமன்னார்கோவில், சீர்காழி உள்ளிட்ட சுற்றுவட்டார மக்கள் இங்கு வந்து, கடலில் குளித்து மகிழ்ந்து செல்வர். கல்லூரிமாணவர்கள் நண்பர்களுடன் ஜாலியாக பைக்கில் வந்து, இந்த கடற்கரைப் பகுதியில்பொழுதை கழிப்பதுண்டு; குளித்து மகிழ்வதுண்டு.

மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழலில், சுற்றுலாத் துறை சார்பில் இங்கு வளர்ச்சிப் பணிகளும் நடந்து வருகின்றன. பல்வேறு சிறுசிறு உணவகங்களும், ராட்டினம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு வருவோரில் சிலர், ஆர்வ மிகுதியில் கடலுக்குள் அதிக தூரம் சென்று குளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்தக் கடற்கரை எவ்வளவு அழகாகஇருக்கிறதோ, அதே நேரத்தில் ஆபத்தும்இங்கு நிறைந்திருக்கிறது. வெளியூர்களில் இருந்து வந்து, ஆழமான பகுதிக்குச் சென்று குளிப்பவர்களிடம், உள்ளூர் மீனவ மக்கள் இதன் ஆபத்தை எடுத்துரைப்பதும் உண்டு.

சுனாமிக்குப் பிறகு, இப்பகுதி கடல் நீரோட்டத்தில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. வெளியில் பார்க்க கடல்அமைதியாக இருக்கும். ஆனால் கடலுக்குள் நீரோட்டம் அதிகமாக இருக்கும். சுழல் அலை தாக்குதலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் கூட சென்னை ஐடி ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர்.

படர்ந்து விரிந்த ஜெல்லி மீன்

இந்தக் கடல் இயற்கையாகவே அடுத்தடுத்து மேடு, பெரும் பள்ளங்கள் என மாறிமாறி உள்ளன. அதாவது, சிறிது தூரம் கடலுக்குள் இடுப்பளவு நீரில் நடந்து செல்லும் வகையில் இருக்கும். திடீரென பல நூறு அடிக்கு பள்ளம் இருக்கும். சுழல் அலை, கடலில் பள்ளம் போன்ற காரணங்களால் இங்கு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இவ்வாறு சாமியார்பேட்டை கடல் பகுதியைப் பற்றி சுற்று வட்டார மக்கள் ஒருவித எச்சரிக்கை தகவல்களைச் சொல்லியே, அங்கு தங்களின் உறவினர்களை மிக பத்திரமாக அழைத்துச் சென்று வருவதுண்டு.

இந்தச் சிக்கலுக்கு மத்தியில் தற்போது,புதிதாக இங்கு விஷ மீன்களின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த கடல் பகுதியில் குளித்த 6 பேர் மீது பெரிய அளவிலான திருக்கை மீனின் முள் குத்தியுள்ளது. இதனால், தோலில் ஏற்பட்ட கடும் கடுப்பு காரணமாக அவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து இப்பகுதியில் ஜெல்லி விஷ மீன்களின் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட, தற்போது சாமியார்பேட்டை கடலில் குளிக்க தடை விதித்து போலீஸார் பேனர் வைத்துள்ளனர்.

பேனர் வைப்பதற்கு முன்னரே உள்ளூர் மக்கள் குளிப்பதை தவிர்த்து விட்டனர். பேனர் வைத்தாலும் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வ மிகுதியில், கடலில் இறங்கி குளிப்பதை தொடரவே செய்கின்றனர்.

ஜெல்லி மீன்

இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தின் பரங்கிப்பேட்டை கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் ஆறுமுகத்திடம் கேட்ட போது, “தொடர்ந்து ஏற்பட்ட காலநிலை மாற்றத்தாலும், கடல் வாழ் சுற்றுப்புற சூழ்நிலை மாற்றத்தினாலும் ஜெல்லி மீன்களின் பெருக்கம் இப்பகுதியில் அதிகரித்துள்ளது.

கோடை காலம் தொடங்கி மழை காலத்தில் தொடக்கம் வரை கடலிலும், கடலிடை பகுதியிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். தற்போதும் கோடை போலவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் ஜெல்லி மீன்கள் வரத்து தொடர்கிறது.

ஜெல்லி மீன்கள், மீன் இனத்தைச் சேர்ந்த உயிரினம் கிடையாது. கடலில் இருக்கும் மிதவை உயிரினம் இது. 212 வகையான ஜெல்லிகள் உள்ளன. இதில் 38 வகை ஜெல்லிகள் மட்டும் மனிதர்கள் உண்ணக் கூடியதாக உள்ளது. ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் இதனை உணவாக உட்கொள்கின்றனர்.

இவற்றில் சில வகை ஜெல்லிகள் மிகவும் ஆபத்தானவை. ஜெல்லிகள் முள் போன்று குத்தாது. மாறாக விஷமுடைய சதைப் பற்றுள்ளதாக காணப்படும். இது மனித உடலில் திசுக்களைக் கிழித்து, உள்ளே விஷத்தன்மையை பரப்பும். மனித உடலில் எந்தப் பகுதியை தாக்குமோ, அந்தப் பகுதி பாதிக்கும். தீக்காயம் ஏற்பட்டது போல் உணர முடியும். இந்த ஜெல்லிகளால் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அல்ல; மீனவர்களுக்கும் கூட ஆபத்துதான். அவர்களின் வலைகளில் மாட்டிக் கொண்டு, மீன் பிடிக்க முடியாமல் செய்து விடும்

இதேபோல் குட்டித் திருக்கை, கடல் கெளுத்தி மீன்கள் குத்தினாலும் பாதிப்பு ஏற்படும். ஆழ்கடலில் உள்ள சில பெரும் திருக்கை மீன்கள் குத்தினால் உயிருக்கே கூட ஆபத்தை விளைவிக்கும். ஜெல்லி,திருக்கை உள்ளிட்டவைகளின் நடமாட்டங்கள் இருப்பதால் தான் சாமியார்பேட்டைகடலில் குளிக்க தடை விதித்துள்ளனர்”என்று தெரிவிக்கிறார். வார இறுதிக்கு சாமியார் பேட்டைக்கு செல்வோர், மேற்கண்ட விஷயங்களை கருத்தில் கொண்டு சென்று வருவது நல்லது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE