சூழலியல் அளவுகோலை கண்டுபிடிக்க விஞ்ஞானிகளுக்கு உதவும் பூச்சியினம்!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: வண்ண வண்ண நிறங்களில் பறக்கும் பட்டாம்பூச்சிகள் குழந்தைகளை குதூகலப் படுத்தும். பெரியவர்களும் மகிழ்ச்சி அடைவர். இந்த பட்டாம்பூச்சி இனங்களை பாதுகாக்க அவை அதிகமாக வாழும் இடங்களில் ‘பட்டாம்பூச்சி பூங்கா’ ஏற்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பட்டாம்பூச்சிகள் இருக்கும் அளவு, அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கை இல்லாததால் அவற்றின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

பட்டாம்பூச்சிகளை பாதுகாக்க ஆண்டுதோறும் பெரிய பட்டாம்பூச்சி மாதம் செப்டம்பரில் அனுசரிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் நாட்டில் உள்ள அனைத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தங்கள் இடத்தில் உள்ள பட்டாம்பூச்சிகளை கணக்கெடுத்து இந்திய பல்லுயிர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.

கடந்த ஆண்டு (2023) பட்டாம்பூச்சி கணக்கெடுப்பின்படி நாட்டில் கறிவேப்பிலை அழகி இனம் 13.74 சதவீதம், ஆரஞ்சு வரியன் 11.84%, புல் மஞ்சள் இனம் 11.52%, வெண்புள்ளி கருப்பன் 9.71%, எலுமிச்சை அழகி 9.64%, மயில் வசீகரன் 9%, விகடன் 8.94%, எலுமிச்சை வசீகரன் 8.75%, கொன்னை வெள்ளையன் 8.62 %,பெரிய பசலை சிறகன் 8.25% உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டும் (2024) பெரிய பட்டாம்பூச்சி மாதம் செப்டம்பரில் அனுசரிக்கப்படுகிறது. இந்த மாதத்தையொட்டி, சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பட்டாம்பூச்சிகளை கணக்கெடுத்து இந்திய பல்லுயிர் (India Bio-diversity Portal, iNaturalist, ifoundbutterflies) இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்கள்.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரும், அமெரிக்கன் கல்லூரி பேராசிரியருமான ராஜேஷ் கூறியதாவது: இந்தியா, அதன் சூடான மற்றும் வெப்ப மண்டல காலநிலை காரணமாக பல அழகான வகை பட்டாம்பூச்சிகளின் தாயகமாக உள்ளது. நாட்டில் 1,500-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சி இனங்கள் உள்ளன. தமிழகத்தில் 319 வண்ணத்து பூச்சியினங்கள் பதிவாகி உள்ளன.

இதில், அழகிகள் (Papilionidae), தகைவிலான் வாலிகள் (19 சிற்றினம்), வெள்ளையன்கள் (Pieridae), மஞ்சள் - வெள்ளை நிறத்திலான நுனிச்சிறகிகள் (32 சிற்றினம்), வரியன்கள் (Nymphalidae), தூரிகைநார்ச் செதில்காலிகள் (94 சிற்றினம்), நீலன்கள் (Lycaenidae) —நீலன்கள், சிறுவாலிகள், தூரிகை மயிர்கொண்ட பட்டாம்பூச்சிகள் (97 சிற்றினம்), தாவிகள் (Hesperiidae) —துள்ளித்தாவும் பட்டாம்பூச்சிகள் (77 சிற்றினம்) போன்றவை முக்கியமானதாக கருதப்படுகின்றன.

சுற்றுச்சூழல் மாற்றங்களால் பட்டாம்பூச்சிகள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பது பற்றிய தகவல்களைச் சேகரிக்க இந்த முடிவுகள் விஞ்ஞானிகளுக்கு உதவுகின்றன. பட்டாம்பூச்சிகளை சூழலியல் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க உதவும் அளவுகோலாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

ஒரு சூழலியல் அமைப்பில் பட்டாம்பூச்சிகள் தென்படவே இல்லை என்றால், அங்கு உறுதியாக ஏதோ பிரச்சினை உள்ளதாகவே கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் முன்பு அதிகமாகக் காணப்பட்ட பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை காலப்போக்கில் குறைந்துகொண்டே வருகிற தெனில் அங்கு சூழலியல்ரீதியாக வாழ்விடச் சிதைவு நிகழ்வதற்கான குறியீடாக கருதப் படுகிறது.

பட்டாம்பூச்சிகள், தாவரங்களின் விதைப் பரவலில் மட்டுமின்றி, உணவுச் சங்கிலியிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல்லிகள், பறவைகள், சிலந்திகள், தவளைகள் போன்ற உயிரினங்களின் உணவில் ஒரு பங்காக உள்ளன. அதுவும் பட்டாம்பூச்சியின் நன்கு வளர்ந்த வடிவத்தை மட்டுமின்றி, புழு வடிவமாக இருக்கும்போது, கூட்டுப்புழுவாக மாறும்போது, அதிலிருந்து பட்டாம்பூச்சியாக மாறியபிறகு என அவற்றின் வாழ்விலுள்ள அனைத்து கட்டங்களிலும் உணவாக உள்ளன. பட்டாம்பூச்சிகள் ஏராளமாக இருப்பது சுற்றுச்சூழல் அமைப்பு செழித்து வளர்வதற்கான அறிகுறியாகும்.

அமெரிக்கன் கல்லூரி பசுமை மேலாண்மைத் திட்ட (GMP) மாணவர்கள் மதுரையில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகங்களில் பட்டாம்பூச்சி கணக்கெடுக்க திட்டமிட்டுள்ளனர். பள்ளி, மற்றும் கல்லூரியில் பட்டாம்பூச்சிகளை கணக்கெடுக்க விரும்பினால் 9443394233 என்ற எண்ணில் எங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE