ஈரோடு: பவானி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில், நாள்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் வகையில் ‘சுட்டிகை சிகிச்சை’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி அரசு மருத்துவமனையின் ஒரு பிரிவாக சித்த மருத்துவப் பிரிவு மருத்துவர் எஸ்.கண்ணுசாமி தலைமையில் செயல்பட்டு வருகிறது.
இப்பிரிவில் நீராவிக் குளியல், சிரசு எண்ணெய் குளியல், வாழை இலை குளியல் மற்றும் மண் குளியல், புற வளையம், வர்மக்கலை, தொக்கணம் (மசாஜ்) உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் நோயாளிகளுக்கு அளிக்கப்படுகின்றன.
தியான பயிற்சி: மேலும், நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே மூலிகைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனை வளாகத்திலேயே பல்வேறு மூலிகைச்செடிகள் அடங்கிய மூலிகைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மன அமைதியை ஏற்படுத்தும் வகையில், சித்த மருத்துவப் பிரிவில் தியான மண்டபமும் செயல்பட்டு வருகிறது.
பவானி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில் பல்வேறு புதிய முறையிலான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவது, நோயாளிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
» இசையமைப்பாளர் இளையராஜா இசை நிகழ்ச்சியில் குழப்பம்: கும்பகோணத்தில் பரபரப்பு!
» கோவையிலிருந்து வெளி மாநிலங்களுக்கு விமானத்தில் 119 டன் காய்கறிகள் அனுப்பி வைப்பு: ஓணம் ஸ்பெஷல்!
மத்திய அரசின் குழு பாராட்டு: மத்திய அரசின் ‘காய கல்ப்’ மருத்துவக் குழுவினர் மற்றும் தேசிய தர உறுதிச் சான்றிதழ் குழுவினர், தமிழக அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள், பவானி அரசு சித்தமருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைத் தோட்டம் மற்றும் பல்வேறு சிறப்பு சிகிச்சைகளை பார்வையிட்டு பாராட்டுத் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் சிறந்த மருத்துவர் விருதையும் இம்மருத்துவமனை மருத்துவர் கண்ணுசாமி பெற்றுள்ளார். இந்நிலையில், பவானி அரசு சித்த மருத்துவமனையில் மாவட்டத்தில் முதல் முறையாக ‘சுட்டிகை சிகிச்சை’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பவானி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் எஸ்.கண்ணுசாமி கூறியதாவது: சித்த மருத்துவத்தில் 32 வகையான வெளிப்புற மருத்துவ முறைகள் உள்ளன. மருந்துகளாலும், இதர சிகிச்சைகளாலும் குணமாகாத, நாள்பட்ட நோய்கள் சுட்டிகை சிகிச்சையால் குணப்படுத்தப்பட்டு வருகின்றன.
உலோகங்களால் ஆன, பல வடிவங்களைக் கொண்ட உபகரணங்களைக் கொண்டு தீயில் சுட வைத்து நோயாளிக்கு நோய் பாதிக்கும் பகுதியில், மிக குறுகிய நொடியில் சுடுதல், ‘சுட்டிகை சிகிச்சை’ எனப்படுகிறது.
உடலில் வலி உள்ள இடங்கள், வர்ம புள்ளிகள் அல்லது அதன் அருகில் இந்த சுட்டிகை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் உடலில் காயம் ஏற்படாது.
அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி: சுட்டிகை சிகிச்சையால், அந்த பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமாகி, உடல் மற்றும் மூளையில், வலியைக் குறைக்கும் ரசாயனங்களைத் தூண்டுவிக்கிறது. இதன் மூலம் நோய்க்கு தீர்வு ஏற்படும்.
நாள்பட்ட கழுத்துவலி, முதுகுவலி, முழங்கால்வலி, இடுப்பு வலி, குதிகால் வலி, ஒற்றைத் தலைவலி, வலிப்பு நோய், முகவாதம், கால் ஆணி, மருக்களை அகற்றுதல் போன்றவற்றுக்கு சுட்டிகை சிகிச்சையால் நிவாரணம் கிடைக்கும். மேலும், உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தவும், இந்த சிகிச்சை உதவும்.
சுட்டிகையில், கால் சுட்டிகை, காந்த சுட்டிகை, மர சுட்டிகை, மண் சுட்டிகை, உலோக சுட்டிகை என ஐந்து வகைகள் உள்ளன. இவற்றில், உலோக சுட்டிகை சிகிச்சை முறையில் நாங்கள் சிகிச்சை அளிக்கிறோம். நோயாளியின் நோயின் தன்மைக்கு ஏற்ப, இரண்டு அல்லது மூன்று முறை சுட்டிகை சிகிச்சை எடுக்க வேண்டும்.
சித்த மருத்துவப் பிரிவுக்கு வரும் நோயாளிகளுக்கு வாரத்தில் எல்லா நாட்களும் வர்ம சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதோடு, செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மசாஜ், நீராவி குளியல், புறவளைய சிகிச்சை, சிரசு எண்ணெய் சிகிச்சை முறை, தியான வகுப்பு போன்றவை நடக்கிறது. தற்போது திங்கள்கிழமை தோறும் சுட்டிகை சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.