நெல்லை அருகே சர்வதேச உயிரிப் பல்வகைமை தின கொண்டாட்டம்

By KU BUREAU

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே திடியூர் கிராமத்தில் ஏட்ரி அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையத்தின் உயிர்ச்சூழல் பண் பாட்டுத் தேடல் நிகழ்வாக சர்வதேச உயிரிப் பல்வகைமை தினம் பொதுமக்களுடன் கொண்டாடப்பட்டது.

இந்த கிராமத்தில் பன்நெடுங் காலமாகவே சங்குவளை நாரை, நெடலி கொக்கு, கூழைக்கிடா உள்ளிட்ட பறவைகள் கூடு அமைத்து இனவிருத்தி செய்து வருகின்றன. குறிப்பாக சங்க இலக்கியங்களில் செவ்வரி நாரை என்று குறிப்பிடப்படும் சங்குவளை நாரை மக்கள் வசிப்பிடத்தை ஒட்டியுள்ள நூறாண்டுகால இலுப்பை மரம் மற்றும் வேம்பு, வில்வம், கருவேல மரங்களில் கூடு அமைத்துள்ளன.

பச்சையாறு மற்றும் செங் குளம், தமிழாக்குறிச்சி உள்ளிட்ட திடியூரை சுற்றியுள்ள எட்டு குளங் களையொட்டி இவை வசிக்கின்றன. இப்பகுதி நீர்நிலைகள் குஞ்சுகளை வளர்த்தெடுக்க தேவையான உணவை அளிப்பதால் தங்கள் கிராமத்துக்கு ஆண்டுதோறும் அதிகளவில் பறவைகள் வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட இயற்கை ஆர்வலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அங்கு கூடு அமைத்துள்ள பறவை இனங்களை நேரடியாக கண்டு அதன் பண்பியல்புகளை பற்றி தெரிந்து கொண்டனர்.

சர்வதேச உயிரிப் பல்வகைமை நாளை கொண்டாடுவதன் முக்கியத்துவத்தையும், அழிவின் விளிம்பில் உள்ள பறவைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் மு .மதிவாணன் விளக்கினார்.

திடியூர் வரலாற்று சிறப்புகளை பற்றி ஆய்வாளர் வானமாமலை, பறவைகளை பற்றி அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் தணிகைவேல், தளவாய் பாண்டி, பீட்டர் மற்றும் ஜேனட் எவாஞ்சலின் ஷீபா ஆகியோர் களப் பயிற்சி அளித்தனர்.

திருநெல்வேலி மாவட்ட பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் செல்வம், முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூந்தன்குளம் மற்றும் திருப்புடைமருதூர் பகுதிகள் நாரைகள் இனப்பெருக்க மையமாக அறியப்படுகிறது. பல ஆண்டுகளாக திடியூரில் நாரைகள் இனப்பெருக்கம் செய்து வரும் போதிலும் கவனம் பெறவில்லை.

உயிரி பல்வகைமை மேலாண்மை சட்டம் 2002-ன் படி திடியூர் ஊராட்சியில் உயிரி பல்வகைமை மேலாண்மை குழு அமைத்து கிராம மக்களின் பங்களிப்புடன் பறவைகள் வாழிடங்களோடு மற்ற பல்லுயிர் வளங்களையும் பாதுக்காக்க தேவையான முன்னெடுப்புகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தணிகைவேல் கேட்டுக்கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE