ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் வாய்ப்பு கிட்டும் தந்தைகள் இங்கே குறைவு. அப்படியொரு அரிதான அப்பா, தனது பிள்ளைகள் செலுத்திய விமானத்தில் பயணிக்கையில், மகிழ்விலும் உயரப் பறந்திருக்கிறார்.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, பெங்களூருவுக்குப் பறக்கத் தயாராகும் ஆகாஷ் விமானத்தின் நுழைவு வாயிலில் ஆரம்பிக்கிறது. பெரியவர் ஒருவர் தனது பயணச் சுமையுடன் பெங்களூரு விமானத்தில் ஏறுகிறார். வயதுக்கே உரிய இறுக்கத்துடன் விமானத்தின் உள்ளே நுழைபவர், திடீரென மகிழ்ச்சியில் முகம் மலர்கிறார். அந்த விமானத்தை இயக்கப்போகும் விமானியான அவரது மகள் ரிக்கி குப்தா தனது தந்தையை உற்சாகத்துடன் வரவேற்றதே அதற்கு காரணம்.
அன்றைய தினத்தின் அந்த தந்தைக்கான சந்தோஷ அதிர்ச்சி அத்தோடு முடியவில்லை. இன்னொரு உற்சாக ஊற்றாக அங்கே அவரது மகனும் எதிர்படுகிறார். தான் பயணிக்கவிருக்கும் விமானத்தை, விமானியாக மகளும், துணை விமானியாக மகனும் இயக்க இருக்கிறார்கள் என்பதை அந்த தந்தை முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை.
விமான நிலையத்தில் தந்தையின் தலையை பார்த்ததும், அவரது மகனும், மகளும் சர்ப்பிரைஸ் தர திட்டமிட்டு இந்த வீடியோவை எடுத்துள்ளனர். பெற்ற குழந்தைகளின் படிப்பு, பணி குறித்து, அனைத்தும் அறிந்தவர் என்றபோதும், எதேச்சையாக பிள்ளைகள் இருவரையும் ஒரே விமானத்தின் விமானிகளாக எதிர்கொண்டது தகப்பனை திக்குமுக்காட செய்திருக்கிறது.
தங்கள் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வை, மகள் ரிக்கி குப்தா தனது சகா உதவியுடன் கேமராவில் பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோவை பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பகிர்ந்திருக்கிறார். ”நினைவில் கொள்ளத்தக்க ஒரு விமானப்பயணத்துக்கு நன்றி” என்ற தலைப்பில் இந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார். ”நாங்கள் அவரை விமானத்தில் அழைத்து செல்லப்போகிறோம் என்பதை அப்பா எதிர்பார்த்திருக்கவில்லை. அதிலும் தனது குழந்தைகளை பணி சீருடையில் பார்த்ததில் அவர் பயணம் நெடுக மகிழ்வுடன் இருந்தார்” என்று அந்த வீடியோவில் தகவல் பகிர்ந்திருக்கிறார் ரிக்கி குப்தா.
வழக்கமான அரசியல், சினிமா, புரட்டு வீடியோக்களுக்கு மத்தியில் அனைவரையும் உருகச் செய்யும் இந்த வீடியோவை நெட்டிசன்கள் சிலாகித்து வருகின்றனர். “தந்தையை பெருமிதம் கொள்ளச் செய்த நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்”, ”புல்லரிக்கச் செய்த வீடியோ” ”அந்த தந்தையின் புன்னகையும், மகிழ்வும் விலை மதிப்பற்றது” என்றெல்லாம் வாழ்த்தி வருகின்றனர். வீடியோ பகிரப்பட்ட 3 நாட்களில் 80 லட்சம் பார்வைகளை அது கடந்திருக்கிறது. இந்த வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களை பகிர்ந்தும், இதயங்களை பறக்கவிட்டும் வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: 4 இந்தியர்கள் உள்பட 13 பேர் மாயம்!
'நீங்கள் வாங்கும் சம்பளம் யார் போட்ட பிச்சை'? திமுக அமைச்சர்களுக்கு ஆளுநர் கேள்வி!
பதற வைத்த பை... கொலை செய்யப்பட்ட இளம்பெண் உடல் மீட்பு!
சோகம்... குஜராத்தில் மின்னல் தாக்கி 20 பேர் பலி!
வந்தே பாரத் ரயில் மீது சரமாரி கல்வீச்சு: ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் பயணிகள் அதிர்ச்சி!