அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 50% தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை: உலக தமிழாராய்ச்சி நிறுவனம்

By லிஸ்பன் குமார்

சென்னை: அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு 30 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விற்பனையில் நூல்கள் விற்பனை செய்யப்படுவதாக உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோபிநாத் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: "அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இலக்கணம், இலக்கியம், தொல்லியல், மருத்துவம், காலக் கணிதம் தொடர்பான நூல்களும், அரிய நூல்களும், அகராதிகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான நூல்களும் 30 முதல் 50 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

நூல் விற்பனை செப்டம்பர் 30ம் தேதி வரை தினமும் (ஞாயிறு நீங்கலாக) காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேரடியாக நடைபெறும். இணைய வழியிலும் உரிய கட்டணத்தை செலுத்தி நூல்களை பெற்றுக்கொள்ளலாம். நூல் விவரங்களை இந்நிறுவனத்தின் இணையதளத்தில் (www.ulakaththamizh.in/) தெரிந்துகொள்ளலாம்.

தமிழ் ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசுப் பணி போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு ‘உலக தமிழாராய்ச்சி நிறுவனம், 2வது முதன்மைச் சாலை, மைய தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை 600 113 செல்போன் எண் 9600021709)’ என்ற முகவரியை அணுகலாம்" என்று நிறுவன இயக்குநர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE