97 வயதில் வானில் சிறகடித்த பாட்டி... ‘வயது என்பது வெறும் எண் மட்டுமே!’

By காமதேனு

97 வயதில் பாராகிளைடிங் மூலம் வானில் பறந்த மூதாட்டி ஒருவரின் வைரல் வீடியோ, ‘சாதனைக்கு வயது ஒரு பொருட்டில்லை’ என நெட்டிசன்களுக்கு உத்வேகம் தந்து வருகிறது.

உயரம் என்றாலே பெரும்பாலானோருக்கு உதறல் எடுக்கும். அதிலும் வாலிபம் கரைந்து வயதானோர், தங்கள் அனுபவத்தால் உயரங்களில் கூடுதல் எச்சரிக்கையாக இருப்பார்கள். ஆனால் அதற்கு விதிவிலக்கும் உண்டு என்று நிரூபித்திருக்கிறார் மராட்டிய மண்ணைச் சேர்ந்த பாட்டி ஒருவர். 97 வயதாகும் அவர் தனது நெடுநாள் கனவை நிறைவேற்ற பாராகிளைடிங்கில் ஏறி பறந்திருக்கிறார்.

பாராகிளைடிங் மூலம் வானை அளக்கும் பாட்டி

வெறும் 55 விநாடிகளே நீடிக்கும் வீடியோவின் தொடக்கத்தில் தட்டுத் தடுமாறி பாட்டி நடந்து வருகிறார். அவரது முகத்தின் சுருக்கங்களே மூதாட்டியின் வயதை பறைசாற்றுகிறது. சுற்றி இருப்போர் உதவியுடன் நாற்காலியில் அமர்வதுபோல தயக்கமின்றி பாராகிளைடிங் இருக்கையில் அமர்கிறார். கண்ணுக்கு குளிர் கண்ணாடி, தலைக்கு கவசம் என வழங்கப்பட்ட அனைத்தையும் அணிந்துகொள்கிறார். அடுத்த சில நொடிகளில் அவர் ஆகாயத்தில் பறக்கிறார்.

விசாரித்த வகையில், தற்போது 97 வயதாகும் இந்த பாட்டியின் நெடுநாள் ஏக்கமாக பாராகிளைடிங் பறத்தல் என்பது இருந்திருக்கிறது. வெகு தாமதமாகவே பாட்டியின் உள்ளக்கிடக்கையை உரியவர்கள் உணர்ந்திருக்கின்றனர். ’இப்போதும் பறக்கத் தயாரா?’ என பாட்டியிடம் விளையாட்டாக அவர்கள் கேட்டதற்கு, அவர் உற்சாகமாக தலையாட்டி இருக்கிறார்.

பிறகென்ன தனியார் பாராகிளைடிங் நிறுவனத்தின் பயிற்சியாளர் உதவியோடு பாட்டி வானை அளந்து திரும்பியிருக்கிறார். ’சின்னச் சின்ன ஆசை சிறகடிக்க ஆசை’ என பின்னணியில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் பொருத்தமாக ஒலிக்க, சேலை கட்டிய பாட்டி பாராகிளைடிங்கில் பறந்ததும், வானில் உலவியபடி அங்கும் இங்குமாய் இயற்கையை ரசித்ததும் கண்கொள்ளா காட்சியாகி இருக்கிறது.

பாட்டி பறக்க உதவிய பாராகிளைடிங் நிறுவனம், தனது விளம்பரத்துக்காக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ சகல சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.

ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் அதிபர் ஆனந்த் மஹிந்திரா, இந்த வீடியோவை பகிர்ந்து ‘இன்றைய தினத்தின் எனது ஹீரோ இவர்தான்’ என உருகியிருக்கிறார். வைரலாகி வரும் இந்த வீடியோவை மீள்பகிர்வோர் "வயது என்பது வெறும் எண் மட்டுமே; சாகசத்திற்கு எல்லை என்பதே இல்லை; பாட்டியின் சாதனையில் உத்வேகம் பெருவோம்” என்றெல்லாம் கொண்டாடி வருகிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

சீனாவை பதறவைக்கும் நிமோனியா காய்ச்சல்; இந்தியாவில் பரவுமா? - மத்திய அரசின் புதிய அறிவிப்பு!

பிக் பாஸ் நடிகைக்கும் பாலியல் தொல்லை கொடுத்த சீனு ராமசாமி - பிஸ்மி மீண்டும் அதிரடி புகார்!

மிஸ் பண்ணாதீங்க... வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: நாளை சிறப்பு முகாம்!

மன்சூர் அலிகானை மன்னித்த த்ரிஷா... ட்வீட் போட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி!

இந்த மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE