சுற்றுலா பயணிகளுக்கு திடீர் தடை! கொடைக்கானலில் இந்த பகுதிகளுக்கு செல்ல அனுமதி கிடையாது!

By காமதேனு

கொடைக்கானலில் உள்ள வன சுற்றுலாத்தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது. வனத்துறையினரின் இந்த நடவடிக்கையினால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கொடைக்கானல்

மலைகளின் இளவரசியாக திகழும் கொடைக்கானலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நாள் தோறும் வந்து செல்கின்றனர். இந்த எண்ணிக்கையானது கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் அதிகமாகும். இங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்வதும், பைன் மர காடுகள், குணா குகை, தூண் பாறை, மோயர் சதுக்கம் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று கொடைக்கானலின் இயற்கை அழகை ரசிப்பது சுற்றுலா பயணிகளின் முக்கிய விருப்பமாக இருக்கும்.

இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள வன சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை உள்ளிட்டவை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

கொடைக்கானல்

பனிமேகங்கள் நிறைந்த கொடைக்கானல்

இந்த பணிகள் இன்று புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளுக்கான பணிகள் முடிவடைந்ததும், சுற்றுலா பயணிகள் மீண்டும் வனப்பகுதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது. வனத்துறையினரின் இந்த அறிவிப்பினால் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ள பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

பை மரக்காடுகளுக்கு செல்லும் சாலையில், இன்று சுற்றுலா வேன் ஒன்று பிரேக் பிடிக்காத நிலையில், அடுத்தடுத்து 5 வாகனங்களின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE