பொற்பனைக்கோட்டை அகழாய்வில் 333 பொருட்கள்; குடும்பத்துடன் பார்வையிட்டு செல்லும் மக்கள்!

By காமதேனு

புதுக்கோட்டை அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வின் போது தொன்மையான பொருட்கள் நூற்றுக்கணக்கில் கண்டெடுக்கப்படுவது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆய்வில் கிடைத்த ஆபரணம்

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. 14 குழிகள் தோண்டப்பட்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு குழியும் 5 மீட்டர் நீளம் மற்றும் அகலத்தில் தோண்டப்பட்டு அதில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வின் போது தங்க ஆபரண வகையிலான 3 பொருட்கள், பானை ஓடுகளின் வட்ட சில்லுகள், குறியீடுகளுடன் கூடிய தொன்மை பொருட்கள் என 333 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆய்வினை பார்வையிடும் மக்கள்

இந்நிலையில் தொல்லியல் அகழாய்வு மூலம் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காண சுற்றுவட்டாரங்களை சேர்ந்த பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வந்து செல்கின்றனர். இதே போல் இப்பகுதியில் நடந்த ஆதிமுனீஸ்வரர் கோயில் திருவிழாவிற்கு வந்தவர்களும், இங்கு வந்து தொல்பொருட்களை பார்த்து ஆச்சரியப்பட்டு செல்கின்றனர்.

பொற்பனைக்கோட்டையில் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் மூலம், எகிப்து உள்ளிட்ட நாடுகளுடனான தமிழகத்தின் வணிக தொடர்பு குறித்த சான்றுகள் கிடைத்துள்ளதாக தொல்லியல் அகழாய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE