‘அலோபதிக்கு எதிராக விஷமம் பரப்பும் பதஞ்சலி’ பாபா ராம்தேவ்க்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

By காமதேனு

நவீன மருத்துவமான அலோபதி மற்றும் அதனை பின்பற்றுவோருக்கு எதிராக தொடர்ந்து விஷமம் பரப்பும், பாபா ராம்தேவ் மற்றும் அவரது பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத மருந்துகள், அழகு மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. அவற்றின் விளம்பரங்களுக்காக, நவீன மருத்துவமான அலோபதியை தாக்கியும் வருகிறது. இதனைக் கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் பல்வேறு வழக்குகளையும் தொடுத்து வருகிறது.

பாபா ராம்தேவ்

அலோபதி மருந்துகளின் பலனை சந்தேகிக்கும் வகையிலும், அதன் மருத்துவர்களை இழிவுபடுத்தும் வகையிலும், பதஞ்சலி வெளியிடும் மோசடி விளம்பரங்களுக்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று விசாரித்தது. பதஞ்சலியின் அறிக்கைகள் மற்றும் விளம்பரங்கள், அப்பட்டமான பொய்யானவை என்றும் அலோபதி குறித்து மக்கள் மனதில் சந்தேகங்களை உருவாக்க, பாபா ராம்தேவ் ஓர் ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை நடத்துவதாகவும் ஐஎம்ஏ குற்றம் சாட்டியது.

வாழ்க்கை முறை கோளாறுகள், குணப்படுத்த முடியாத, நாள்பட்ட மற்றும் மரபணு நோய்கள், தோல் நோய்கள், மூட்டுவலி, கர்ப்பப்பை வாய் அழற்சி, ஆஸ்துமா உள்ளிட்டவற்றுக்கு நிரந்தர தீர்வு காண்பதாகவும் பதஞ்சலி விளம்பரம் செய்கிறது. இவற்றில் பலவும் ’மருந்துகள் மற்றும் மந்திர தீர்வுகள் (ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்) சட்டம் 1954-ன் கீழ் தடைசெய்யப்பட வேண்டியவை. வாழ்க்கை முறை நோய்களைக் கண்டறிதல், குணப்படுத்துதல், தணித்தல், சிகிச்சை ஆகியவற்றைக் கோரும் எந்தவொரு விளம்பரத்தையும் இந்தச் சட்டம் தடை செய்கிறது.

பாபா ராம்தேவ்

ஜூன் 2020-ல் கொரோனா பரவலின் மத்தியில், ​​​​பாபா ராம்தேவ் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது, கொரோனா தொற்றுக்கான மருந்தை பதஞ்சலி நிறுவனம் உருவாக்கியுள்ளதாக அறிவித்தார். இதனையடுத்து ’பதஞ்சலி நிறுவனம் இது போன்ற பொய்யான தகல்களை பரப்பக் கூடாது’ என மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பிய பிறகே அடங்கினார். பின்னர் 2021, மே மாதம் நடந்த மற்றொரு பொது நிகழ்ச்சியில், ’முட்டாள்தனமான மற்றும் திவாலான அறிவியல்’ என்று அலோபதியை பாபா ராம்தேவ் சாடினார். ’தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொண்டதால் 1000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இறந்துவிட்டனர் என்று பொய்யான தகவலை தெரிவித்தார்.

பாபா ராம்தேவ்க்கு எதிராக ஐஎம்ஏ பல்வேறு வழக்குகளை தாக்கல் செய்தது. அவற்றின் உச்சமாக உச்ச நீதிமன்றம் விசாரித்த முக்கிய வழக்கில் மேற்கண்டவற்றை முன்வைத்து ஐஎம்ஏ வாதிட்டது. இதனையடுத்து ’பதஞ்சலியின் நடவடிக்கைகளை அப்பட்டமான சட்ட மீறல்’ என சாடிய உச்ச நீதிமன்றம், ’பதஞ்சலி தனது போக்கினை இதே வகையில் தொடர்ந்தால், அதனை நீதிமன்றம் தீவிரமாக எடுத்துக்கொள்ளும்’; ‘அபராதமாக பெரும்தொகை விதிக்கப்படும்’ என்றும் கண்டித்தது.

நீதிமன்றம் கண்டிப்பு

மேலும் யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் அவரது வர்த்தக நிறுவனமான பதஞ்சலி ஆகியவை, ’அனைத்து வகையான நோய்களையும் குணப்படுத்துவதாகவும் பிரச்சாரம் செய்வதையும், அதன் சரிபார்க்கப்படாத மற்றும் தவறான விளம்பரங்களைத் தடுக்கவும், விரிவான வழிமுறையைக் கொண்டு வருமாறு’ மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE