விவசாயிகள் கவனத்திற்கு... சம்பா பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்!

By காமதேனு

தமிழகத்தில் சம்பா பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு என்பது நாளையுடன் முடிவடையுள்ள நிலையில், தகுதியுள்ள விவசாயிகள் இன்றே விண்ணப்பிக்கும் மாறு அந்தந்த மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

சம்பா பயிர் பாதிப்பு

பருவ நிலை மற்றும் கால நிலை மாற்றம் காரணமாக தமிழக விவசாயிகள் அதிகளவு நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில், பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படுகிறது. சம்பா, தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15ம் தேதி வரை விவசாயிகளுக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி இந்த காலஅவகாசம் முடியும் கடைசி நாளில் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டது.

அதாவது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் இருப்பது, தீபாவளி பண்டிகை காலம், இணைய சேவை மையங்களில் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால் பல விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலையை எதிர்கொண்டனர்.

இதையடுத்து பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக வேளாண் ஆணையம் எல்.சுப்பிரமணியன் சார்பில் மத்திய வேளாண் துறைக்கு கடிதம் எழுதப்பட்டு இருந்தது. இதனை ஏற்று மத்திய அரசு காப்பீட்டுக்கான தேதியை நீட்டிப்பு செய்தது.

அதன்படி மத்திய வேளாண் அமைச்சகம் பயிர் காப்பீட்டுக்கான காலஅவகாசத்தை வரும் 22ம் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்து கூடுதல் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வாய்ப்பு ஏற்பட்டது. இந்த தேதி நீட்டிப்பால் பல விவசாயிகள் சம்பா பயிர் காப்பீடு செய்தனர். இந்த நிலையில் நாளை கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE