குட்நியூஸ்; இன்று முதல் மீண்டும் உதகை மலை ரயில்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

By காமதேனு

மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ரயில் பாதையில் விழுந்திருந்த பாறைகள், மண் ஆகியவற்றை அகற்றும் பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து, மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையேயான மலை ரயில்சேவை இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக உலகப் புகழ்பெற்ற மலை ரயில் பாதையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும், பாறைகள் மற்றும் மண் ரயில் பாதையில் உருண்டு விழுந்ததால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைச் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

மலை ரயில்

கடந்த 9-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை மேட்டுப்பாளையம்-குன்னூர் மற்றும் குன்னூர்-உதகை இடையேயான மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. உதகை-குன்னூர் இடையேயான மலை ரயில்பாதையில் மட்டும் சீரமைப்பு பணி நிறைவடைந்ததால், மலை ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்தன.

இருப்பினும் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையேயான பகுதியில் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. குறிப்பாக கல்லார் பகுதியில் ரயில் பாதையின் கீழே இருந்த நிலப்பகுதி முற்றிலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் பணி நிறைவடைந்தது.

குன்னூர் மலை ரயில்

இதையடுத்து, இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையம்-குன்னூர்-உதகை இடையேயான மலை ரயில் சேவை தொடங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்தில், பனிக்காலம் என்றாலும் தற்போது 2வது சீசன் துவங்கி உள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர்.

மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துவந்த நிலையில், ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளது சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE