மூன்றாம் பாலினத்தினர் தன்னம்பிக்கையுடன் வாழ ஓவியப் பயிற்சி @ மதுரை

By சுப.ஜனநாயகச்செல்வம்

மதுரை: மூன்றாம் பாலினத்தினர் தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கு மதுரை திருநங்கைகள் - திருநம்பிகள் ஆவண மையம் சார்பில் இலவச ஓவியப் பயிற்சி பட்டறை இன்று தொடங்கியது.

மதுரை சொக்கிகுளத்திலுள்ள திருநங்கைகள் - திருநம்பிகள் ஆவண மையம் சார்பில் மூன்றாம் பாலினத்தினர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கு பல்வேறு இலவச பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது முதல் முறையாக இலவச மூன்று நாள் ஓவிய பயிற்சி பட்டறை இன்று தொடங்கியது. இந்நிகழ்வில் திருநங்கை பிசியோ தெரபிஸ்ட் டாக்டர் சோலு, திருநங்கைகள் ஆவண மைய மேலாளர் ஷாலினி சரவணன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர்.

மதுரை ஓவிய ஆசிரியர் சரவணன், பல்வகை ஓவியப் பயிற்சிகள் குறித்து பயிற்சி அளித்து வருகிறார். இதில் மதுரையின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த திருநங்கைகள் மற்றும் திரு நம்பிகள் பலர் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.

இது குறித்து திருநங்கைகள் - திருநம்பிகள் ஆவண மையத்தின் நிர்வாக அறங்காவலர் பிரியா பாபு கூறுகையில், இச்சமூகத்தில் திருநங்கைகள், திருநம்பிகள் மற்றவர்களைப் போல் சுய தொழில் செய்து கவுரவமாக வாழ்வதற்கு பல முன்னெடுப்புகளை செய்து வருகிறோம். அவர்கள் உயர்கல்வி கற்று சமூகத்தில் நல்ல நிலைக்கு வருவதற்கு கல்வி பயிற்சி, விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம். இவர்களுக்கான இணையதள இதழ்கள் நடத்தி வருகிறோம்.

இவர்களிடையே எழுத்தாளுமை உள்ளவர்களிடம் உள்ள திறமைகளை வெளிப்படுத்திட அவர்கள் எழுதிய கதைகளை நூலாக வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் தற்போது ஓவியப் பயிற்சி அளித்து வேலைவாய்ப்புகள் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். அதன் மூலம் அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கு வழிவகைகள் செய்து தருகிறோம். தினமும் 2 மணி நேர பயிற்சி பெறுவோருக்கு ரூ.150 வீதம் மூன்று நாளுக்கு ரூ.450 படியும் வழங்குகிறோம், என்றார்.

இது குறித்து திருநங்கை அமிழ்தினி கூறுகையில், இது போன்ற பயிற்சிகள் மூலம் எங்களுக்குள் ஒளிந்துள்ள திறமைகளை வெளிக்கொணர முடிந்தது. மேலும் வாழ்வாதாரத்திற்கான பயிற்சியாகவும் ஓவியக்கலை இருப்பதை அறிந்துகொண்டோம். இதன் மூலம் நாங்களும் கவுரவமாக வாழும் வழி கிடைக்கிறது, என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE