இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் பிறந்த தினம் இன்று; இந்தியாவின் தவிர்க்க இயலாத சகாப்தம்!

By காமதேனு

இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமராக நாளது வரையில் நினைவுகூரப்படும், இரும்பு பெண்மணி இந்தியா காந்தியின் பிறந்த தினம் இன்று.

இந்திரா காந்தி

உலகளவில் பெண்களின் ஆதர்சங்களில் ஒருவராக நீடிப்பவர் இந்திரா காந்தி. ஏற்றமும் இறக்கமும் நிறைந்த தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கையின் போராட்டங்களை, இறுதியாக தனது நெஞ்சில் வாங்கிய துப்பாக்கி குண்டுகளுக்கு இணையான தீரத்துடன் எதிர்கொண்டவர். இரும்பு பெண்மணி என்ற அடையாளத்துக்கு இலக்கணமானவர்.

சுதந்திர போராட்ட வீரர் மோதிலால் நேருவின் பேத்தி, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஒரே மகள் என பெரும் பின்னணியுடன் அரசியலில் முன்னிறுத்தப்பட்டாலும், இந்திரா கடந்து வந்த பாதைகள் கரடுமுரடானவை.

இந்திரா வாழ்வின் பல தருணங்கள்

தாகூரின் சாந்தி நிகேதன் பள்ளியிலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் படிப்பை முடித்த இந்திரா, தேசத்தின் விடுதலைக்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர். தாயின் அரவணைப்பு அவசியமாகும் வயதில் அவரை இழந்த இந்திரா பிரியதர்ஷினி, தந்தையின் அரசியல் புறப்பாட்டில் அவருக்கு துணையாக நின்றார். அங்கிருந்தே இந்திரா காந்தியாக அவருக்கான அரசியல் பாலபாடமும் தொடங்கியது. நேரு மறைவுக்குப் பின்னரான லால்பகதூர் சாஸ்திரி ஆட்சிக் காலத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சரானார்.

இந்திரா காந்தி

சாஸ்திரியின் மறைவுக்குப் பின்னர் கட்சி, ஆட்சி இரண்டுக்கும் பொறுப்பானார். 1966 முதல் 1977 வரை தொடர்ந்து மும்முறை பிரதமராக ஆட்சி செய்தார். பின்னர் 1980ல் மீண்டும் பதவியேற்று 1984-ல் தனது பிரத்யேக பாதுகாவலர்களால் கொல்லப்படும் வரை நான்காவது முறை பிரதமராக நீடித்தார்.

இரும்பு பெண்மணி என்பதற்கு அடையாளமாக, தனது தந்தையின் வழியில் நின்று புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்தார். கிழக்கு பாகிஸ்தானின் கோரிக்கைக்காக இந்திய ராணுவத்தை ஏவி, பங்களாதேஷ் உருவாக வழி செய்தார். சகலத்திலும் துணையாக நின்ற மகன் சஞ்செய் காந்தியை விமான விபத்தில் இழந்த தருணம் தவிர்த்து, இரும்பு பெண்மணி தனது வாழ்நாளில் எதற்கும் கலங்கியதில்லை.

இரு மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்திரா காந்தி

அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பினால் தனது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடுமோ என்ற அவசரத்தில், தேசத்தில் எமெர்ஜென்சியை கொண்டு வந்தார். அவரது அரசியல் வாழ்க்கையில் அழியாத கறையான அந்த அடையாளத்தையும் துடைத்தெறிந்து, பிற்பாடு மக்கள் ஆதரவோடு மீண்டும் ஆட்சியை பிடித்தார்.

தேசத்தின் பிரிவினைவாதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்கினார். பொற்கோவிலில் மறைந்திருந்த காலிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாட புளூஸ்டார் நடவடிக்கையின் பெயரில் ராணுவத்தை ஏவியதில், நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் பலியானார்கள். இதன் பக்க விளைவாக தனது சீக்கிய பாதுகாவலர்களால் இறுதியில் இந்திரா சுட்டுக்கொல்லப்பட்டார்.

இன்றைக்கும் அரசியலுக்கு அப்பால் ஒரு தீரமிக்க பெண் ஆளுமையாக அவர் கொண்டாடப்பட்டு வருகிறார். அரசியல் பாதையின் சில சறுக்கல்களை தவிர்த்துவிட்டால் இரும்பு பெண்மணி இந்திரா காந்தி இந்தியாவின் சகாப்தமாகவே நீடிப்பார்.

போர் முனையில் இந்திரா காந்தி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE