இல்லத்தரசிகள் மகிழ்ச்சி... 80 ரூபாயாக குறைந்தது தக்காளி விலை!

By காமதேனு

கடந்த சில நாட்களாக 100 ரூபாய்க்கு மேல் இருநூறு ரூபாய் வரை விற்று வந்த ஒரு கிலோ தக்காளியின் விலை இன்று 100 ரூபாய்க்கு கீழே குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் தக்காளி உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் கனமழை பெய்து தக்காளி உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி கோயம்பேடு காய்கறி சந்தையில் அதிகபட்சமாக 180 ரூபாய் வரையில் விற்றது. அதுவே சில்லறை விற்பனை கடைகளில் 200 ரூபாய்க்கு மேல் விற்பனையானது.

இதனால் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டில்பசுமை கடைகளில் முதல் கட்டமாக தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. ஆனாலும் தக்காளி விலை கட்டுக்குள் வரவில்லை.

இந்நிலையில் இன்று கோயம்பேடு சந்தைக்கு 550 டன் தக்காளி வந்துள்ளது. சென்னையில் தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விற்பனை கடைகளில் இரண்டாம் ரக தக்காளி 80 ரூபாய் விலைக்கு கிடைக்கிறது என்பதால் அதிகபட்சம் 100 ரூபாய் விலையில் சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிடைக்கும். இதனால் கடந்த பல நாட்களுக்குப் பிறகு தக்காளி விலை நூறு ரூபாய்க்கும் கீழே குறைந்துள்ளது என்பதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் கோயம்பேடு சந்தையில் முதல் ரக தக்காளியின் விலை 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதை வாங்க நடுத்தர மக்கள் அதிகம் ஆர்வம் காட்டாத நிலையில் 80 ரூபாய்க்கு விற்கப்படும் இரண்டாம் ரக தக்காளி அதிக அளவில் விற்பனையாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE