தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால் 1000 இடங்களில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. முகாம்களில் பங்கேற்பவர்கள் ஆதார் கட்டாயம் கொண்டு வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகவே காணப்படுகிறது.
எனவே, டெங்கு உள்ளிட்ட நோய்களுக்காக தமிழகம் முழுவதும் டிசம்பர் மாதம் வரை 1,000 சிறப்பு மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்தது. இதனையடுத்து இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதனை சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
உடல் நிலையில் சரியில்லாதவர்கள் மற்றும் மருத்துவ முகாமிற்கு வருபவர்கள் ஆதார் கட்டாயம் கொண்டு வர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த மருத்துவ முகாம் மக்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அமைச்சர் கோரிக்கைவிடுத்தார்.