தமிழறிஞர் மா.நன்னனின் நூல்கள் நாட்டுடமை... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

By காமதேனு

தமிழறிஞர் மா. நன்னனின் நூல்கள் நாட்டுடமையாக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்கூடல் எனும் ஊரில் 1924 ம் ஆண்டில் பிறந்தவர் புலவர் மா.நன்னன். இவரது இயற்பெயர் திருஞானசம்பந்தன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார். தமிழ் மீது கொண்ட அளவு கடந்த பற்றால், தன் பெயரை ‘நன்னன்’ என மாற்றிக் கொண்டார்.

கல்லூரியில் பயின்ற போது ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்றார். தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே சென்னை பல்கலைக்கழகத்தில் இன்டர்மீடியட், பி.ஏ., எம்.ஏ. பட்டங்களைப் பெற்றார். தொல்காப்பியப் பேராசிரியர் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். உயர்நிலைப் பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரிகளில் பணியாற்றினார்.

பின்னர் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராகவும் பணியாற்றினார். 1942 முதல் கல்வியியல், சமூகவியல், அரசியல், தொழிலாளர் இயல் ஆகியன குறித்து பல மேடைகளில் பேசியுள்ளார். வயது வந்தோர் கல்வி வாரியத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர்.

எழுத்தறிவித்தலில் ‘நன்னன் முறை’ என்ற புதிய முறையையே உருவாக்கியவர். தமிழ் இணையப் பல்கலைக்கழக வாயிலாக இவர் கற்றுக்கொடுத்த முறையை கோலாலம்பூர், லண்டனில் உள்ள தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. சென்னைத் தொலைக்காட்சியில் ‘எண்ணும் எழுத்தும்’ என்ற தலைப்பில் 17 ஆண்டுகள் தமிழ் கற்பித்தார். ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

அவரது நூற்றாண்டு நிறைவு விழா சென்னை தியாகராய நகரில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின் மா.நன்னனின் நூல்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்படும் என்று அறிவித்தார்.

இவ்விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் "நன்னன் அப்பழுக்கற்று நேர்மையாக வாழ்ந்தவர். தனது வாழ்நாளில் எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தவர். தனது கொள்கைக்காக அப்படியே வாழ்ந்து காட்டியவர். அவரது சிந்தனை, எழுத்துக்கள், செயல் மூலம் இன்னும் அவர் நம்மிடையே வாழ்கிறார். தொடர்ந்து வாழ்வார்" என்று புகழாரம் சூட்டினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE