தேசிய கண்தான வாரம்: ‘கண் தானம்’ குறித்த விழிப்புணர்வு தகவல்கள்!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ஆண்டு தோறும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரையிலும் கண்தானம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக தேசிய கண்தான இரு வார விழாவை கடைப்பிடிக்கிறது.

பார்வையிழப்பால் பலர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் கருவிழி பிரச்சினையால் பார்வையிழந்தவர்களுக்கு (Corneal Blindness) கண்தானம் (Eye Donation) மூலம் பார்வை கொடுக்க முடியும். பொதுமக்களிடையே கண்தானம் குறித்த புரிதல்கள் சரியான அளவில் இல்லை. ஆனால், திரைப்படங்களிலும், சமூக வலைதளங்களிலும் கண்தானம் குறித்த தகவல்கள் நிறைய தவறுகளுடன் பகிரப்படுகின்றன. இதை தெளிவுப்படுத்த, யார் வேண்டுமானாலும் கண் தானம் செய்யலாம். கண் தானத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகள், எவ்வாறு கண்தானம் செய்யப்படுகிறது போன்றவை பற்றி தேசிய கண்தான இரு வார விழாவில் விழிப்புணர்வு செய்யப்படுகிறது.

இது குறித்து தேசிய கண் மருத்துவ சங்கம் முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் கண்மருத்துவ உதவியாளர் (ஓய்வு) மு.வீராசாமி கூறியதாவது: "கண் தானம் செய்ய விருப்பம் உள்ளோர் தங்கள் வீட்டின் முன் உள்ள அறை மற்றும் வரவேற்பு அறையில் ‘எங்கள் குடும்பம் கண் தானம் செய்ய விருப்பமுள்ள குடும்பம்’ என்ற செய்தியை ஒரு ‘ஏ 4’ தாளில் கண் வங்கியின் தொலைபேசியுடன் எழுதி ஒட்டிவிட வேண்டும். வீட்டுக்கு வருவோர் போவோர் அனைவரது பார்வையிலும் இது படும். இது ஒரு வகையில் அவர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இன்னொரு வகையில் அந்த வீட்டில் யாரேனும் இறக்க நேர்ந்தால் அந்த நேரத்தில் இறந்தவர் கண் தானம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தது நினைவுக்கூரப்பட்டு கண் தானமாக கிடைக்க பயனுள்ளதாக இருக்கும். இதை விடுத்து, வெறுமனே படிவத்தை பூர்த்தி செய்து ‘நானும் கண் தானம் செய்திருக்கிறேன்’ என்று சொல்வதில் பயனில்லை. கண் தானம் குடும்ப நிகழ்வாக மாற வேண்டும்.

ஒருவர் இறந்த பிறகு உறவினர்களுக்கு சொல்லியாச்சா, பந்தலுக்கு சொல்லியாச்சா, மயானத்துக்கு சொல்லியாச்சா? என்று விசாரிப்பது போன்று கண் வங்கிக்கு சொல்லியாச்சா? என்று சொல்லும் நிலையும் ஏற்பட வேண்டும். கண் தானம் செய்வதற்கு, முன்னரே பதிவு செய்திருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஒருவர் இறந்தவுடன் அவரது நெருங்கிய உறவினர்களோ, நண்பர்களோ சம்மதித்தால் போதுமானது.

கண்களை தானமாக எடுக்கலாம். ஒருவர் இறந்தவுடன் ஆறு மணி நேரத்துக்குள் கண்களை உடலில் இருந்து அகற்ற வேண்டுமாதலால் இறந்தவுடன் அருகில் உள்ள கண் வங்கிக்கு போன் மூலம் தகவல் சொல்ல வேண்டும். இறந்தவரின் கண்களை மூடி, மூடிய இமையின் மேல் ஈரப் பஞ்சினை வைக்கலாம். உடல் வைக்கப்பட்டிருக்கும் அறையின் மின் விசிறியை நிறுத்தி விட வேண்டும்.

கண் வங்கியில் இருந்து மருத்துவர் வீட்டிற்கே வந்து கண்களை எடுத்துச் செல்வார். கண்களை எடுக்க 10 நிமிடங்களே போதும். எடுத்தவுடன் முகம் விகாரமாகத் தோன்றாது. ஆண், பெண், சிறுவர், பெரியவர், கண்ணாடி அணிந்தவர், கண்ணில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் யார் வேண்டுமானாலும் தானம் செய்யலாம். எல்லா மதங்களுமே கண் தானத்தை ஆதரிக்கின்றன. கருவிழி மாற்று அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது" என்று ​வீராசாமி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE